Published : 14 Nov 2017 08:22 AM
Last Updated : 14 Nov 2017 08:22 AM

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 42 பேரை ஏமாற்றியவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 42 பேரை ஏமாற்றிய சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து போலி விசா மற்றும் ரூ.2.6 லட்சம் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்ராஜ் என்கிற கார்த்திக் (30). இவர் சென்னை முகப்பேரில் விநாயகா டிராவல்ஸ் என்ற நிறுவனம் மூலம் வேலைக்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் துண்டு பிரசுரங்களைக் கொடுத்து விளம்பரம் செய்துள்ளார்.

இதனை நம்பிய கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முகமது யூசுப் மகன் இப்ராஹிம் (26) உள்ளிட்ட 42 பேர் தலா ரூ.50 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளனர். இப்பணத்தை பெற்றுக்கொண்ட அருண்ராஜ் துபாய்க்கு அனுப்புவதாக பாஸ்போர்ட், விசா, மற்றும் 13-ம் தேதி பயணம் செய்ய தக்கவகையில் விமான பயணச்சீட்டு ஆகியவற்றை அனுப்பியுள்ளார்.

இதனை பெற்ற இப்ராஹிம் விமான பயணச்சீட்டு வந்துவிட்டது என்பதை தெரிவிக்க அருண்ராஜை தொடர்பு கொண்டபோது மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்து சந்தேகமடைந்து, அன்றே விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கோமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயசங்கர், அண்ணாதுரை உள்ளிட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படையினர் 24 மணி நேரத்தில் அருண்ராஜை கைது செய்து அவரிடமிருந்து கம்ப்யூட்டர், லேப்டாப், 2 மொபைல் போன், 52 ஒரிஜினல் பாஸ்போர்ட், 52 கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி விசா, போலி விமான டிக்கட்,ரூ. 2.60 லட்சம் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x