“மக்களவைத் தேர்தல் களத்தில் திமுக இளைஞரணி பங்களிப்பை அதிகம் எதிர்பார்க்கிறேன்” - ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இளைஞரணியினரின் பங்களிப்பை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திமுக இளைஞரணிக்கு இன்று 44 வயது. 44-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கும், புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கும் இளைஞரணியின் ஆற்றல்மிகு இளைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவின் எழுச்சிக்கும் உணர்ச்சிக்கும் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் தோன்றிய காலம் முதல் உறுதுணையாக இருந்து வருவது இளைஞரணியாகும். அதே பங்களிப்பை வருங்காலங்களிலும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

உதயநிதி பொறுப்பேற்ற பின் நடத்திய திராவிட மாடல் பாசறைக் கூட்டங்கள் நமது கொள்கையை ஊட்டும் வகுப்புகளாக அமைந்திருந்தன. இயக்கத்தை நோக்கி வரும் இளைஞர்களை ஈர்க்கும் கூட்டங்களாக மட்டுமல்ல, கொள்கை எதிரிகளுக்குப் பதிலளிக்கும் கூட்டங்களாகவும் அமைந்திருந்தன. இத்தகைய பாசறைக் கூட்டங்களை வருங்காலத்திலும் தொடரக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவைக் காக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இளைஞரணியினரின் பங்களிப்பை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன். திமுக அரசின் ஈராண்டு சாதனைகளை மக்கள் மனதில் பதியும் வகையில் பரப்புரை செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் தேர்தல் பணி என்பது திட்டமிட்டுச் செய்ய வேண்டியது ஆகும். அந்த தேர்தல் பணிகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இளைஞரணிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவர்க்கும் கற்றுத்தர வேண்டும். இதற்கான பயிற்சியை மாநாடு கூட்டி அனைத்து இளைஞரணிப் பொறுப்பாளர்களுக்கும் வழங்குமாறு இளைஞரணிச் செயலாளரைக் கேட்டுக் கொள்கிறேன்.

எந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்புடனும் இளைஞரணியைத் கருணாநிதியும், பேராசிரியரும் தொடக்கி வைத்தார்களோ, அதே எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் நான் இருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in