ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு: விலைக்கு தண்ணீர் வாங்கும் ஏழை நோயாளிகள்

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு: விலைக்கு தண்ணீர் வாங்கும் ஏழை நோயாளிகள்
Updated on
2 min read

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நிலவும் குடிநீர் பிரச்சினையால் ஏழை நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக கடைகளில் 5 லிட்டர் குடிநீர் கேன் ரூ.60 கொடுத்து வாங்கி வருகின்றனர்.

அடிப்படை தேவைகளில் முக்கியமான குடிநீர் வசதியை முறையாக ஏற்படுத்தாமல் நோயாளிகளையும் அவர்களின் உறவினர்களையும் குடிநீர் வாங்க வெளியில் அலையவிட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக, சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை திகழ்கிறது. உள்நோயாளிகளாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தினமும் புறநோயாளிகளாக 12 ஆயிரத்துக்கும் அதிக மானோரும் சிகிச்சை பெறுகின்றனர்.

இவர்கள் தவிர, நோயாளிகளுடன் உடன் இருப்பவர்கள், வந்து செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் அதிகமாகும். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் சுகாதாரமான குடிநீர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளை ஏற்படுத்தியிருந்தாலும், அதில் பல இடங்களில் தண்ணீர் வருவதில்லை. சில இடங்களில் வரும் குடிநீரும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. அதனால், மருத்துவமனை வளாகத்திலும், வெளியிலும் உள்ள கடைகளில் பணம் கொடுத்து குடிநீரை வாங்கி நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் கூறியதாவது: இந்த மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையில் எந்த குறையும் இல்லை. நல்ல முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். ஆனால், குடிக்க நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை.

சில இடங்களில் தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீரை குடிக்க முடியாது. உணவு சாப்பிட்டப்பின் கைகளையும், பாத்திரங்களையும் கழுவி கொள்கிறோம். மருத்துவமனை வளாகத்தில் உள்ள கடைகளில் 5 லிட்டர் கொண்ட தண்ணீர் கேன் ரூ.60-க்கு விற்பனை செய்கின்றனர்.

விலை அதிகமாக இருந்தாலும், குடிக்க தண்ணீர் தேவைக்காக வாங்க வேண்டியுள்ளது. அதனால்தான், கடைகளில் இருந்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். கேனில் தண்ணீர் காலியானதும், அந்த கேனை எடுத்து சென்று கடையில் கொடுத்தால் ரூ.10 வாங்கிக் கொண்டு தண்ணீர் நிரப்பி கொடுக்கின்றனர்.

வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் 20 லிட்டர் கொண்ட தண்ணீர் கேன் ரூ.20, ரூ.25, ரூ.30 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படும் நிலையில், 5 லிட்டர் கொண்ட தண்ணீர் கேன் ரூ.60 என கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். மருத்துவமனையில் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்தால் ஏழை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவர்கள், செவிலியர்களிடம் கேட்ட போது, “மருத்துவமனையில் குடிநீர் பிரச்சினை ரொம்ப காலமாக இருக்கிறது. நாங்களே கடைகளில் இருந்து கேன் தண்ணீரை வாங்கி தான் பயன்படுத்தி வருகிறோம். நோயாளிகளும் கேன் தண்ணீரை வாங்கி குடிக்கின்றனர்.

சில நோயாளிகள் குடிநீர் எங்கே வருகிறது என்று கேட்பார்கள். ஏற்கெனவே, நோயாளிகளாக இருக்கும் அவர்களுக்கு தண்ணீரால் கூடுதல் பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதால், விலை அதிகமாக இருந்தாலும் கடைகளில் விற்பனை செய்யப்படும் கேன் தண்ணீரை வாங்கி குடிக்க பயன்படுத்துமாறு சொல்கிறோம்” என்றனர்.

குடிநீர் பிரச்சினை தொடர்பாக மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறியதாவது: மருத்துவமனையில் காலை, மதியம், மாலையில் தலா ஒரு மணி நேரம் எல்லா தளங்களிலும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. அந்த நேரத்தில் நோயாளிகளுடன் உடன் இருப்பவர்கள் 5 லிட்டர் கேன்களை கொண்டு வந்து மொத்தமாக குடிநீரை பிடித்துசெல்கின்றனர். இதனால், குடிநீர் விரைவாக தீர்ந்து விடுகிறது.

இதனை தடுப்பதற்காக, ரூ.25 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக ஆர்ஓ போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் குடிநீர் வழங்கவும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. சிகிச்சை பெறும் வார்டுகளிலேயே நோயாளிகள் சுத்திகரிக்கப் பட்ட குடிநீரை பிடித்து பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in