காவிரி நீரை பங்கிட்டு வழங்குவதில் மேலாண்மை ஆணையம் மெத்தனம்: டெல்லியில் துரைமுருகன் சாடல்

மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்த தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்
மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்த தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்
Updated on
1 min read

சென்னை: காவிரி நீரை பங்கிட்டு வழங்குவதில் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசி, கோரிக்கை மனுவை அளித்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு, கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி நீரினை தமிழத்துக்கு அளித்திட, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகள் வழங்கக் கோரி, 19.07.2023 அன்று எழுதிய கடிதத்தை, நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து கடிதத்தை அளித்து, கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு அளிக்கவேண்டிய காவிரி நீரை அளிக்காததால் தமிழகத்தில் நிலவும் நீர்ப் பற்றாக்குறை பற்றி எடுத்துரைத்தார்.

இத்தகைய கடினமான சூழலில், குறுவை பயிரினை காக்க, கர்நாடக அரசு உடனடியாக காவிரி நீரை திறந்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இப்பிரச்சனையில் தலையிட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி மாத வாரியாக நிர்ணயிக்கப்பட்ட நீரினை வழங்குமாறும், நீர்குறைபாட்டை ஈடு செய்யுமாறும், கர்நாடகாவிற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட தேவையான அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர், கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கும் மற்றும் நீர் பற்றாக்குறை காலங்களில் சரியான நீர் பங்கீடு செய்வதற்கு தேவையான முறையை செயல்படுத்துவதுக்கு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதாக உறுதியளித்தார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மாத, மாதம் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீர், தற்போது வரை வழங்கப்படவில்லை. கர்நாடகா அரசு நீர் வழங்காததால் தமிழகத்துக்கு 22.54 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.

காவிரி தண்ணீர் பற்றாக்குறையால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் வாடும் நிலை உருவாகி உள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். நதிநீர் பங்கிட்டு வழங்குவதில் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in