

நாகர்கோவில்: பழுதான அரசுப் பேருந்தை இயக்க மறுத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்த ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாகர்கோவிலில் உள்ள ராணித்தோட்டம் பணிமனைக்குரிய அரசுப் பேருந்தை ஓட்டுநர் ஞான பெர்க்மான்ஸ் என்பவர் நேற்று முன்தினம் திருநெல்வேலிக்கு ஓட்டிச்சென்றார்.
வள்ளியூர் வரை பேருந்து சென்ற நிலையில் அங்கேயே பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார். பேருந்தில் பிரேக் பிடிக்காதது உட்பட பல பழுதுகள் இருப்பதால் அந்தப் பேருந்தை மேற்கொண்டு இயக்க முடியவில்லை என்றும், அவ்வாறு இயக்கினால் பயணிகளுக்கு பாதுகாப்பில்லை எனவும் கூறி, மாற்று பேருந்து மூலம் பயணிகளை திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பேருந்தை ஒப்படைத்தார்.
பாதுகாப்பானது என அறிக்கை: இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நேற்று காலை அந்தப் பேருந்தை ஆய்வு செய்தனர். அதன் அறிக்கையை நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு அனுப்பினர். அதில், பயணிகளுடன் இயக்கும் வகையில் பேருந்து பாதுகாப்பானதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஓட்டுநர் ஞான பெர்க்மான்ஸை பணியிடை நீக்கம் செய்து நாகர்கோவில் அரசுப் போக்குவரத்து கழக பொது மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டார்.