மதுபானங்கள் கொள்முதல் குறித்து தகவல் அளிப்பதில் விலக்கு உள்ளதா? - டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுபானங்கள் கொள்முதல் குறித்து தகவல் அளிப்பதில் விலக்கு உள்ளதா? - டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: மதுபானங்கள் கொள்முதல் குறித்து தகவல் அளிப்பதில் விலக்கு உள்ளதா? என்பது குறித்து பதில் அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மூலமாக மதுபானங்களை விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம், அதில் ஊழியர்களுக்கான சம்பளம், கடை வாடகை உள்ளிட்ட இதர செலவினங்கள் குறி்த்தும், எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்பது குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரிவிக்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு கோரியிருந்தார்.

ஆனால் மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருமானம், அதில் ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களை வழங்கிய டாஸ்மாக் நிர்வாகம், எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது மூன்றாவது நபரின் தனிப்பட்ட வர்த்தகம் சார்ந்தது என்பதால், அந்த விவரங்களை வழங்க முடியாது என மறுத்து விட்டது.

இதை எதிர்த்து லோகநாதன், கடந்த 2017-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது என்ற விவரங்களை மனுதாரருக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிவிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, மூன்றாவது தரப்பின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் தகவல் உரிமைச் சட்டத்தின்படி இந்த தகவல்களை வழங்க முடியாது என்றும், இதுபோன்ற தகவல்களை அளிப்பதில் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் விலக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மட்டுமே மதுபானங்களை கொள்முதல் செய்கிறது. மதுபானங்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்படுவதில்லை, நேரடியாக மதுபானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்கிறது.

இந்தச் சூழலில் வர்த்தகம் எந்த வகையில் பாதிக்கப்படுகிறது என்பதையும், டாஸ்மாக்குக்கு எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற தகவலை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அளிப்பதில் இருந்து விலக்கு உள்ளதா? என்பது குறித்தும் டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in