

சென்னை: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று விடுத்த அறிக்கை: கடந்த 16-ம் தேதி `நம்ம சாமி, நம்ம கோயில்,நாமே பாதுகாப்போம்' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இந்து முன்னணி சார்பில் கொள்கை விளக்கம், இந்துக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் போன்றவை அனைத்து ஒன்றியங்கள், வட்டங்களில் நடத்தப்பட்டது.
சுமார் 3,500 இடங்களில் நடைபெற்ற சிறு சிறு கூட்டங்களில் 1.75 லட்சம் பேர் கலந்துகொண்டனர். கூட்டங்களில், இந்து சமய அறநிலைய துறையால் கோயில்களுக்கு ஏற்பட்டுள்ள சீர்கேடுகள், இந்துக்களின் நம்பிக்கையை திட்டமிட்டு கொச்சைப்படுத்தும் திமுக, திக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிகஆகிய கட்சிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களான சமூக ஊடகத்தினர் பற்றியும், கோயில்கள் இடிக்கப்பட்டது, சிறப்புத் தரிசனம் உள்ளிட்டபல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டது.
அந்தந்த பகுதியில் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களுக்குப் பகுதி வாழ் பொதுமக்கள் ஆதரவு தந்தனர். அவர்கள் தங்களது பகுதிகளில்உள்ள கோயில்களின் அவல நிலை குறித்தும்கூறினர். அதன்படி, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள கோயில்கள் மிகுந்த அவல நிலையில் உள்ளன.
எனவே, இந்து முன்னணியின் நீண்ட நாள்கோரிக்கையான `அரசே ஆலயத்தை விட்டுவெளியேறு' என்பதை வலியுறுத்தி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அறிக்கை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகமக்கள் தங்கள் பகுதி கோயில்களை காக்க முன்வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.