

சென்னை: நடிகை விந்தியா குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக, திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது சென்னை சைபர் க்ரைம் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலராகவும், பேச்சாளராகவும் இருப்பவர் நடிகை விந்தியா. இவரைப் பற்றி திமுக கொள்கை பரப்பு துணைச் செயலரும், பேச்சாளருமான குடியாத்தம் குமரன், யூடியூப் சேனல்ஒன்றில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் நடிகை விந்தியா புகார் அளித்தார். அதில், பெண்கள்வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ், குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், அவர் பேசியிருந்த வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஆய்வு செய்த தேசிய மகளிர் ஆணையம், உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார், திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது, ஆபாசமாகப் பேசுதல், பெண்ணின் நாகரிகத்தை அவமதிக்கும் நோக்கில் பேசுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
ஏற்கெனவே, நடிகை குஷ்பு குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.