

சென்னை: பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் மத்தியபாஜக அரசைக் கண்டித்து, விசிக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் திருமாவளவன் பேசியதாவது:
குற்றவியல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானவை. அதேநேரத்தில், மதம் சார்ந்த வழிமுறைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதே சிவில் சட்டம். இந்து மதத்துக்குள்ளேயே ஏராளமான ஜாதிகள் உள்ளன.
இந்துக்களுக்கு இடையே ஒற்றுமை தேவைப்படுகிறது என்பதால்தான், பொது சிவில் சட்டத்தை அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால், அவர் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்ததைப்போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். அவரது கருத்தை திரித்துப் பேசுகின்றனர்.
தற்போது நல்லெண்ணத்தின் அடிப்படையில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட பாஜக விரும்புகிறது. இந்துக்களா, முஸ்லிம்களா என்ற மோதல் போக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகின்றனர்.
பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான உள்நோக்கம் ஆபத்தானது. சமத்துவக் கருத்துகளை உள்வாங்கியதால் பாஜகவின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்து மதத்தில் இனி சாதியப் பாகுபாடு இருக்காது என்று அறிவிக்க முடியுமா? இவ்வாறு திருமாவளவன் பேசினார்.