

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2 மாதங்களில் ரூ.120 கோடியில், 185 கி.மீ. நீள சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.433 கோடியில், 3,676 சாலைகளை 645.60 கி.மீ. நீளத்துக்கு அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தங்கள் கோரப்பட்டன.
கடந்த 2 மாதங்களில் ரூ.99 கோடியில் 169 கி.மீ. நீளத்தில், 897 தார்சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.20.69 கோடியில் 24 கி.மீ. நீளத்தில் 196 சிமென்ட் கான்கிரீட் சாலைப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.120 கோடியில் 185 கி.மீ. நீளத்துக்கு சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட மடிப்பாக்கம், ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட மணப்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல, கடந்த 2 மாதங்களில் கொசஸ்தலையாறு வடிநிலத் திட்ட நிதியின் கீழ், கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் 703 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்ப் பணிகளில், 119.57 கி.மீ. நீளத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
கோவளம் வடிநிலத் திட்ட நிதியின் கீழ், கோவளம் வடிநிலப் பகுதியில் 160 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளில் 48 கி.மீ. நீளத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.