

சென்னை: கல்லூரி பேராசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் எம்.நாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநிலம் முழுவதும் உள்ளகலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே வகையான பொதுபாடத் திட்டம் என்பது, பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையை பறிப்பதாகும். மேலும்,அந்தப் பாடத் திட்டம் தரமற்றதாகவும் உள்ளது.
எனவே, ஒரே பாடத் திட்ட முறையைக் கைவிட வேண்டுமென்று, உயர்கல்வி மன்றத்துடன் கடந்தஜூலை 12-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டது.
அப்போது அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தற்போது மாதிரி பாடத் திட்டமே அனுப்பப்பட்டுள்ளது. அதை ஏற்பது அல்லது மறுப்பதை அந்தந்த பல்கலைக்கழகங்களின் பாட வாரியம் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உயர்கல்வி மன்றம் விளக்கம் அளித்தது.
ஆனால், அதற்கு மாறாக தமிழகத்தில் பொது பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டதாக, உயர்கல்வி மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, கலை, அறிவியல் படிப்புக்கான பொது பாடத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொது பாடத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துதல், பல்கலைக்கழகங்கள் முன் வரும் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துதல் உள்ளிட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.