

மதுரை: மதுரையில் ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் இடம் தேடி வருகிறது. ஆனால் மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் வியாபாரிகள் மாற்று இடத்துக்குச் செல்ல மறுத்து, இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக சந்திக்க முடிவெடுத்துள்ளனர்.
மதுரை கரிமேட்டில் மொத்த மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. ராமேசுவரம், தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து மீன்கள் இங்கு விற்பனைக்கு வந்தன. ‘கரோனா’ காலத்தில் தற்காலிகமாக இந்த மீன் மார்க்கெட், மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மாநகராட்சி காலி இடத்தில் அமைக்கப்பட்டது.
அதன் பிறகு மீன் வியாபாரிகள் இந்த இடத்தை விட்டு செல்ல மறுத்தனர். தங்களை அதே இடத்தில் மீன் மார்க்கெட் நடத்த அனுமதிக்க அமைச்சர்கள், ஆட்சியர், மேயர், ஆணையரை சந்தித்து முறையிட்டு வந்தனர். மாட்டுத் தாவணி மீன் மார்க்கெட்டில் கடை வைத்திருப்போர் மாநகராட்சி நிர்ணயித்த வாடகையை செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இவர்களில் 30 பேர் கடை வாடகை எதுவும் செலுத்தாமல் அனுமதியின்றி செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அதை மறுத்த அந்த வியாபாரிகள், மேயர் தூண்டுதலால் திட்டமிட்டு கடைகளை அப்புறப் படுத்தினர் என்றனர். கடைகளை அப்புறப்படுத்திய போது வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இந்த சூழலில் மாநகராட்சிக்கும் மீன் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம், மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்து நிரந்தரமாக மாற்று இடத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் உள்ள பகுதி அருகே டைடல் பார்க் வர உள்ளது. அதனால், மீன் மார்க்கெட் உள்ள காலி இடம் தேவைப்படுகிறது. அதற்கு பதிலாக ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் அமைத்து, அங்கு மீன் வியாபாரிகளை இடமாற்ற இடம் தேடும் பணி நடக்கிறது என்றனர். ஆனால், வியாபாரிகள் அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்து இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.