

தருமபுரி மாவட்டம் நத்தம் கிராமத்தில் இளவரசனின் நினைவஞ்சலி நிகழ்ச்சி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
காதல் கலப்புத் திருமண விவகாரத்தில் தொடர்புடைய தருமபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனின், முதலாமாண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நினைவு நாளில் அரசியல் கட்சியினர், சாதி அமைப்பினர் பங்கேற்றால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறி மாவட்டம் முழுமைக்கும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற வழிகாட்டுதல்படி மட்டுமே நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மூலம் கூறப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கி 2.55 மணி வரை இளவரசனின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என சுமார் 40 பேர் நினைவிடத்தில் மலர் தூவி சடங்குகளை செய்து அஞ்சலி செலுத்தினர். அப்போது தன் மகனின் பிரிவை நினைத்து இளவரசனின் தாயார் கிருஷ்ணவேணி கதறி அழுதார். பின்னர் 4 மணி வரை மற்ற உறவினர்கள் 50 பேர் கொண்ட குழுக்களாக அடுத்தடுத்து அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.