Published : 15 Nov 2017 10:03 AM
Last Updated : 15 Nov 2017 10:03 AM

பெண் இன்ஜினீயர் எரித்துக் கொலை: சென்னை ஆதம்பாக்கத்தில் கொடூர சம்பவம் - தடுக்க போராடிய தாய் கவலைக்கிடம்; தங்கை படுகாயம்

சென்னை ஆதம்பாக்கத்தில் திருமணம் செய்ய மறுத்த பெண் இன்ஜினீயரை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை திட்டம் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ஆதம்பாக்கம், சரஸ்வதி நகர், 7-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (48). கனடாவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக உள்ளார். இவரது மனைவி ரேணுகா (44). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் இருந்தனர். மூத்த மகள் இந்துஜா (22) பி.டெக் இன்ஜினீயரிங் படித்து விட்டு துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். கடந்த 2 மாதமாக பணிக்குச் செல்லவில்லை. இரண்டாவது மகள் நிவேதா (20). தியாகராய நகரில் பட்டயக் கணக்காளர் தொடர்பான படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மகன் மனோஜ் (16). அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ரேணுகா, இந்துஜா, நிவேதா, ஆகியோர் வீட்டின் வரவேற்பரையில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். மழை பெய்து கொண்டு இருந்தது. இரவு 8.45 மணிக்கு வேளச்சேரி பாண்டித்துரை தெருவைச் சேர்ந்த ஆகாஷ் (24) ரேணுகாவின் வீட்டுக்கு வந்துள்ளார். கூடவே கேன் ஒன்றையும் எடுத்து வந்துள்ளார். அதை வீட்டின் வெளியே காலணி வைக்கும் இடத்தில் மறைத்து வைத்து விட்டு வீட்டினுள் நுழைந்துள்ளார்.

ரேணுகாவிடம், "இந்துஜாவை எனக்கு ஏன் திருமணம் செய்து வைக்க மறுக்கிறீர்கள். அவரை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். இதனால், கோபம் அடைந்த ரேணுகா, "நாங்கள் இப்போது இந்துஜாவுக்கு திருமணம் செய்து வைக்கும் மன நிலையில் இல்லை. அவரை கனடாவுக்கு மேற்படிப்பு படிக்க வைக்க உள்ளோம்" என்று தெரிவித்தார். ஆனால், ஆகாஷ், "இந்துஜாவை தனக்கு திருமணம் செய்து வைத்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக தெரிவித்துள்ளார்.

இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்துஜாவும், ஆகாஷிடம், நான் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இதனால், ஆகாஷ் கடும் கோபம் அடைந்துள்ளார்.

விரைந்து சென்று வீட்டுக்கு வெளியே வைத்திருந்த கேனை எடுத்தார். கண் இமைக்கும் நேரத்துக்குள் அதில் இருந்த மண்ணெண்ணெய்யை இந்துஜா மீது ஊற்றினார். இதை ரேணுகாவும், நிவேதாவும் தடுக்க முயன்றனர். இதனால், மேலும் ஆத்திரம் அடைந்து அவர்கள் மீதும் ஆகாஷ் மண்ணெண்ணெய்யை ஊற்றினார். தொடர்ந்து தயாராக வைத்திருந்த லைட்டரால் தீயை பற்ற வைத்து விட்டு வந்த பைக்கிலேயே ஆகாஷ் தப்பினார்.

தீ கொழுந்து விட்டு எரிந்தது. 3 பேரும் வலியால் துடித்தனர். அறைக்குள்ளேயே அங்கும், இங்குமாக ஓடினர். அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டனர். மேல் மாடியில் போன் பேசிக்கொண்டு இருந்த மனோஜ் சத்தம் கேட்டு ஓடி வந்தார். சணல் சாக்கு மூலம் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீயின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து சென்று 3 பேர் மீதும் பற்றிய தீயை அணைத்தனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி இந்துஜா பரிதாபமாக உயிர் இழந்தார். ரேணுகா 49 சதவீத தீக்காயம், நிவேதா 23 சதவீத தீக்காயத்துடன் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

rightகாரணம் என்ன?

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஆகாஷ் மற்றும் இந்துஜா இருவரும் 10 முதல் 12-ம் வகுப்பு வரை வேளச்சேரியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போது, நண்பர்களாக பழகி உள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் இருவரும் தனித்தனி கல்விக் கூடங்களுக்கு படிக்கச் சென்றுள்ளனர். இந்துஜா பி.டெக் இன்ஜினியரிங் படித்தார்.

ஆகாஷ் படப்பையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால், அவர் இரண்டே ஆண்டில் படிப்பை விட்டுள்ளார். பின்னர், சரியான வேலை ஏதும் கிடைக்காமல் சுற்றியுள்ளார். பழைய பள்ளி நட்பு இருவரிடமும் தொடர்ந்து இருந்துள்ளது. 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், சரியான வேலையும் மாதம் குறைந்தது ரூ.30 ஆயிரம் சம்பளமும் கிடைத்தால் ஆகாஷுக்கு மகளை திருமணம் செய்து வைக்கலாம் என்ற எண்ணத்திலும் ரேணுகா குடும்பத்தினர் இருந்ததாக தெரிகிறது. ஆனால், ஆகாஷ் எதிர்பார்த்த அளவுக்கு வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

இதனால், இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்துஜா, ஆகாஷுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். அவரது குடும்பத்தினரும் ஆகாஷை விட்டு சற்று விலகியே இருந்துள்ளனர். இதனால், தனக்கு இந்துஜாவை திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு ஆகாஷ் வந்துள்ளார். இதுகுறித்து பல முறை ரேணுகா தரப்பிடம் உறவினர்கள் மூலம் பேசியுள்ளார். அவர்களும் இந்த சம்பந்தம் சரிபட்டு வராது என ஆகாஷ் குடும்பத்தினரிடம் அவர்களது உறவினர்கள் மூலமும் 10 நாட்களுக்கு முன்புவரை பேசியுள்ளனர்.

இருப்பினும் இந்துஜா தன்னைத்தான் காதலிக்க வேண்டும், திருமணமும் செய்து கொள்ள வேண்டும் என ஆகாஷ் பிடிவாதமாக கூறி வந்துள்ளார். அதற்கு சாதகமான சூழல் ஏற்படவில்லை. இறுதியில் தனக்கு கிடைக்காத இந்துஜா யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு சதி திட்டம் தீட்டியுள்ளார். முன்னதாக கடிதம் ஒன்றை அனைவருக்கும் தனித்தனியாக வீட்டில் எழுதி வைத்துள்ளார். பின்னர் தனது பைக்கில், இந்துஜா வீட்டுக்கு சென்று கொலைத் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். தற்போது ஆகாஷை கைது செய்துள்ளோம் என்று ஆதம்பாக்கம் போலீஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது அருகில் வசிக்கும் ராம்குமார், ரகு ஆகியோர் காப்பாற்ற முயன்றுள்ளனர். இதில், ராம்குமாருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. கீழ்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை டீன் வசந்தா மணி கூறும்போது, "ரேணுகா, நிவேதா கவலைக்கிடமான முறையில் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்றார்.

தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற மனோபாவம்: மனநல மருத்துவர் விளக்கம்

தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற மனோபாவம்தான் சென்னை ஆதம்பாக்கத்தில் இளம்பெண் எரித்துக் கொலை செய்யக் காரணம் என்று கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் சத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ஒரு வேலைக்குச் செல்ல தகுதி வேண்டும். ஆனால் காதலிக்க எந்த தகுதியும் தேவையில்லை. எல்லா காதலும் திருமணத்தில் முடிவதில்லை. காதலி தனக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. காதலி எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் உண்மையான காதல். அதுதான் உன்னதமான காதல்.

இதனை எல்லா காதலிலும் எதிர்ப்பார்க்க முடியாது. காதலில் பல விதம் உள்ளது. தனக்கு கிடைக்காத பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்வது என்பது விபரீதமான காதல். நீ எனக்கு மட்டும்தான் சொந்தம். நீ எனக்கு கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் பெண்கள் மீது ஆசிட் வீசுவது, மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பது போன்றவைகளை செய்வார்கள்.

இது ஒரு மோசமான மனநிலையாகும். இதனை மோசமான மனநோய் என்றும் சொல்லலாம். கீழே தள்ளிவிடுவது, கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு அடிப்பது என்பது அந்த நேரத்தில் வரும் ஆத்திரத்தில் செய்வதாகும். ஆனால், எரித்துக் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு மண்ணெண்ணெய்யை கையில் எடுத்து செல்வது ஆத்திரத்தில் செய்வது இல்லை. அதனால், இந்த சம்பவத்தை அவர் ஏதோ ஆத்திரத்தில் செய்துவிட்டார் என்று மனிதாபிமான அடிப்படையில் பார்க்கக்கூடாது. அவரை ஒரு குற்றவாளியாகதான் பார்க்க வேண்டும்.

right

குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது என்று கேட்டது எல்லாம் வாங்கித் தருகின்றனர். சிறுவயது முதலே தான் கேட்டது, ஆசைப்பட்டது எல்லாம் கிடைத்து விடுகிறது. வளர்ந்த பின்னர் தான் ஆசைப்பட்டது கிடைக்காத நேரத்தில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் பெற்றோர் குழந்தைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும். எது சரி, எது தவறு என்று சொல்லி புரிய வைத்து வளர்க்க வேண்டும். குழந்தைகள் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து பழக்கப்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஆதம்பாக்கம் சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் வலியுறுத்தியுள்ளனர்.

ராமதாஸ்: சென்னை ஆதம்பாக்கத்தில், திருமணத்துக்கு மறுத்த பட்டதாரிப் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்திருக்கிறார். இந்த தாக்குதலில் அப்பெண்ணின் தாயாரும், சகோதரியும் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். காதல் விவகாரத்தில் நடந்துள்ள இந்தக் கொடூரக் கொலை பேரதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் ஒருதலைக் காதல் வெறிக்கு இரையாகி தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர். பெண்களை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். இதற்காக மகளிரைக் கொண்ட தனிக்காவல் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் தனிச்சட்டமும் இயற்றப்பட வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக பின்தொடர்ந்து வந்து சீண்டலில் ஈடுபடுவோர் குறித்து பெற்றோரிடம் தெரிவிப்பதுடன், அருகிலுள்ள காவல் நிலையத்திலும் முறைப்படி புகார் செய்ய பெண்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

100 

ஜி.கே.வாசன்: இந்த கொடூர சம்பவத்தை நடத்தியவருக்கு சட்டத்துக்கு உட்பட்டு அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தர வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாத அளவுக்கு சட்டத்தை கடுமையாக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரையுள்ள பெண் இனத்துக்கு எதிரான கொடுமைகள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதை தமிழக அரசு மிக முக்கியப் பிரச்சனையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கிண்டல், கேலிகள் போன்றவைகள் இனியும் நடைபெறாமல் இருப்பதற்கு தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு, பாதுகாப்பு போன்றவற்றில் காவல்துறையின் பணியை முழுமையாகப் பயன்படுத்தி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x