Published : 07 Nov 2017 08:57 AM
Last Updated : 07 Nov 2017 08:57 AM

கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கடைமடைப் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான, கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்கள், புவனகிரி வட்டத்தின் ஒரு பகுதி, ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தின் ஒரு பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் கடந்த 8 நாட்களாக கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.

இதனால் டெல்டா பகுதியில் உள்ள ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இப்பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிரிடப்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

டெல்டா பகுதியின் முக்கிய நீர் ஆதாரமான வீராணம் ஏரியில் தற்போது 45.20 அடி தண்ணீர் உள்ளது. இதன் முழுக் கொள்ளளவு 47.50 அடி ஆகும். தொடர் மழையால் உருவான நீர்வரத்து அதிகமாக உள்ளதால், கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் பகுதியில் பெய்யும் மழை செங்கால் ஓடை உள்ளிட்ட பல்வேறு ஓடைகள் வழியாக விநாடிக்கு சுமார் 800 கனஅடி வீதம் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஏரியின் பாதுகாப்புக் கருதி 45 அடி வரை ஏரியில் தண்ணீரை வைத்திருக்க முடிவு செய்து, ஏரியின் அதிகப்படியாக உள்ள நீரை சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள விஎன்எஸ்எஸ் வடிகால் மதகு வழியாக விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

மண வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், பழைய கொள்ளிடம், பாசிமுத்தான் ஓடை, தில்லை காளியம்மன் ஓடை உள்ளிட்ட வடிகால் வாய்க்கால்கள் வழியாக மழைநீர் வடிய வைக்கப்படுகிறது.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள ஷண்டன், ஆயங்குடி, மோவூர், எடையார், உடையூர், பிள்ளையார்தாங்கல், நடுத்திட்டு, கீழப்பருத்திக்குடி, மேலபருத்திக்குடி, முள்ளங்குடி, அத்திப்பட்டு, ஆலம்பாடி, நளன்புத்தூர், குமராட்சி, தில்லைநாயகபுரம், வையூர் உள்ளிட்ட 25 கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. அதேநேரம், தொடர் மழை காரணமாக இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

கீழணையில் தற்போது 7 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் இப்பகுதிகளின் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x