

அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக, தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மட்டும் இதுவரை 14.5 லட்சத்துக்கும் மேற்பட்ட செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தக் கணக்குகளில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக ‘சுகன்யா சம்ரிதி யோஜனா’ (செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டம்) என்ற சிறு சேமிப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் அஞ்சலகங்கள் மற்றும் குறிப்பிட்ட வங்கிகளில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். அந்தக் கணக்கில் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தப்பட்சம் ஆயிரம் ரூபாயும் அதிகப்பட்சம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் டெபாசிட் செய்ய முடியும். 15 ஆண்டுகள் டெபாசிட் செய்ய வேண்டும். அந்த பெண் குழந்தை 10-ம் வகுப்பு முடித்த பிறகு உயர்கல்வி செலவுகளுக்கு டெபாசிட் தொகையில் 50 சதவீதத்தை தேவைப்பட்டால் திரும்ப எடுத்து கொள்ளலாம். முதிர்வு காலமான 21 ஆண்டுகள் முடிந்த பிறகு அல்லது பெண் குழந்தையின் திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு கணக்கை முடித்து கொள்ளலாம். செல்வ மகள் சேமிப்பு கணக்குக்கு ஆண்டுக்கு 8.3 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணம் ஆகிய செலவுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதால் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தையின் பெயரில் அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தைச் சேர்ந்த அஞ்சல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அஞ்சல் துறை சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி வருகிறோம். மேலும், அஞ்சல் துறை ஊழியர்கள் வீடுவீடாக சென்று செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன்காரணமாக, செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் அதிக எண்ணிக்கையில் கணக்கு தொடங்குவதில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் தேசியளவில் முன்னிலை வகிக்கிறது. திட்டம் தொடங்கப்பட்ட நாளில் (22.01.2017) இருந்து கடந்த அக். 31-ம் தேதி வரையிலான காலத்தில் ஒட்டுமொத்தமாக 14 லட்சத்து 55 ஆயிரத்து 195 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த கணக்குகளில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.