Published : 23 Jul 2014 10:28 AM
Last Updated : 23 Jul 2014 10:28 AM

தமிழக மீனவர்கள் 43 பேரை விடுவிக்க விரைவு நடவடிக்கைக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 43 பேரையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 55 விசைப்படகுகளையும் விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில்: "பாக் நீர்நிலைப் பகுதியில், மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது குறித்து தங்களிடம் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

கடந்த 21-ம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 18 பேர் 5 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களை சிறைபிடித்த இலங்கைக் கடற்படையினர், காங்கேசன்துரை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

அதே நாளில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வில், ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் 20 பேரும் அவர்களது 4 விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், கடந்த 16-ம் தேதியன்று புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் சென்ற விசைப்படகு, இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திசை மாறிச்சென்றது. அப்போது அவர்கள் அனைவரும் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் இம்மாத இறுதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் நின்றபாடில்லை. இது தமிழக மீனவ சமுதாயத்தினர் மத்தியில் ஒருவித அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் தலைமையிலான அரசு எடுத்த முயற்சியின் காரணமாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 225 மீனவர்களும் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்களது 46 படகுகளும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

இது இலங்கை அரசு வேண்டும் என்றே மேற்கொள்ளும் நடவடிக்கை. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க வேண்டும் என்றே இந்த முயற்சியை அவர்கள் மேற்கொள்கின்றனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

இவ்விவகாரத்தை மத்திய அரசு, இலங்கை அரசிடம் எடுத்துரைத்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழகம் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழகம் கோரி வரும் நிலையில், இந்திய - இலங்கை கடல் எல்லையில் ஒளிரும் மிதவை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பது சரியானதல்ல.

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி ஏற்கெனவே தங்களுக்கு 21-ம் தேதி கடிதம் எழுதியுள்ளேன்.

எனவே தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதோடு, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 43 பேரையும், அவர்களது 55 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x