

தமிழகத்தில் மிகவும் பழுதாகவுள்ள 639 அரசு பள்ளிக்கூட கட்டிடங்களை இடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த இரண்டு மாதங்களில் 345 கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.
தமிழகத்தில் பொதுப்பணித் துறை சார்பில் 52 அரசுத் துறைகளின் அலுவலகக் கட்டிடங்கள், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், விருந்தினர் மாளிகைகள், சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளை, கீழமை நீதிமன்ற கட்டிடங்கள், நீதிபதிகளின் பங்களாக்கள், அமைச்சர்களின் குடியிருப்புகள் உள்பட சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த கட்டிடங்களில், 7 ஆயிரத்து 550 கட்டிடங்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவையாகும். 40 முதல் 60 ஆண்டுகளுக்கு முன்பு 6 ஆயிரத்து 400 கட்டிடங்களும், 20 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்பு 14 ஆயிரத்து 800 கட்டிடங்களும், 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு 7 ஆயிரத்து 520 கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 9 ஆயிரத்து 300 கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
அரசு பள்ளிக் கட்டிடங்களைப் பொருத்தவரை பொதுப்பணித் துறை சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படுகிறது. அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிக்கூடங்களுக்கான கட்டிடங்களை ஊரக வளர்ச்சித் துறை கட்டிக் கொடுக்கிறது.
அரசுப் பள்ளிகளில் உள்ள மொத்த கட்டிடங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் கட்டிடங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் பொதுப் பணித் துறைக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பொதுப்பணித் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் பராமரிக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் கொடுத்த அறிக்கை அடிப்படையில்
மிகவும் பழுதாகி சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக் கட்டிடங்களை இடிக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளோம். கடந்த இரண்டு மாதங்களில் 345 பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 639 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் புதிய கட்டிடம் ஒவ்வொன்றும் ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி செலவில் கட்டப்படுகிறது. இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
===============================
தகவலுக்காக- தமிழ்நாட்டில் அண்மையில் போக்குவரத்துக் கழகப் பணிமனையும், தீயணைப்புத் துறை அலுவலகமும் இடிந்த விழுந்தன. அப்போது உயிரிழப்பும் ஏற்பட்டது. இந்த இரண்டு துறைகளுக்கு சொந்தமான கட்டிடங்களை பொதுப்பணித்துறை பராமரிக்காவிட்டாலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களின் உறுதித்தன்மையை சோதித்தது. குறிப்பாக பள்ளிக் கட்டிடங்களில் பழுது நீக்கும் பணியை பொதுப்பணித் துறையை துரிதப்படுத்தியுள்ளது.
===========