Published : 24 Nov 2017 10:17 AM
Last Updated : 24 Nov 2017 10:17 AM

முதல்வர் அணிக்கு இரட்டை இலை சின்னம்: அரசியல் கட்சித் தலைவர்கள், அதிமுக நிர்வாகிகள் கருத்து

முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:

ராமதாஸ் (பாமக நிறுவனர்): ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இனி ஆட்டம் அதிகரிக்கும். அழிவும் விரைவுபடும். இனி ஆர்.கே.நகர் தேர்தல் அவசரமாக நடத்தப்படும். உள்ளாட்சித் தேர்தலும் உடனடியாக நடத்தப்படும்.

கே.ஏ. செங்கோட்டையன் (பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்): ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. யாருக்கு பெரும்பான்மை எம்பி., எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறதோ அவர்களுக்குதான் சின்னம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில்தான் முதல்வர் பழனிசாமி - ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது.

பி.தங்கமணி (மின்துறை அமைச்சர்): தர்மம் வெற்றி பெற்றிருக்கிறது. இனி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கட்சியை வழிநடத்துவார்கள். தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் எதிர்தரப்பினர் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராகப் பேசி வருகின்றனர். இதனை அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் ஏற்க மாட்டார்கள்.

டி.ஜெயக்குமார் (மீன்வளத் துறை அமைச்சர்): எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வெற்றிச் சின்னம் மீண்டும் கிடைத்துள்ளது ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. தர்மம் என்றும் வெல்லும் என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்துக்கிறது. அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனுக்கும் இந்நாள் மகிழச்சியான நாள். பெரும்பான்மையின் அடிப்படையில் கட்சியும், ஆட்சியும் ஒரே தலைமையின் கீழ் முழுமையாக வந்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு.

செல்லூர் கே.ராஜூ (கூட்டுறவுத் துறை அமைச்சர்): அதிமுக என்பது பீனிக்ஸ் பறவை போன்றது. யாராலும் அழிக்க முடியாது என்பது தேர்தல் ஆணையம் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக ஒரு கட்சி தனது சின்னத்தை மீட்டெடுத்திருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், பிஹாரில் நிதிஷ்குமாருக்கு எந்த அடிப்படையில் தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியதோ, அந்த அடிப்படையில்தான் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு இன்றுதான் தீபாவளி.

வளர்மதி (முன்னாள் அமைச்சர்): எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் அவரால் தொடங்கபட்ட அதிமுகவின் பெயரும், இரட்டை இலை சின்னமும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பை தேர்தல் ஆணையம் நிறைவேற்றியுள்ளது.

பி.வெற்றிவேல் (தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ): தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. 12 எம்எல்ஏக்களைக் கொண்ட ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்தபோது இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், தற்போது எங்களிடம் உள்ள 18 எம்எல்ஏக்களின் ஆதரவை கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பளித்துள்ளது உள்நோக்கம் கொண்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை செல்வோம்.

புகழேந்தி (தினகரன் ஆதரவாளர்): ஓபிஎஸ் எதிர்ப்பை ஏற்றுக் கொண்டு எந்த காரணத்தைக்கூறி தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியதோ, அதற்கு நேர் எதிராக இப்போது ஒரு தரப்புக்கு இரட்டை இலையை வழங்கியுள்ளது. இது நியாயமான தீர்ப்பல்ல. உச்ச நிதிமன்றம் வரை சென்று நீதியை நிலைநாட்டுவோம். ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெறுவார்.

ராஜா செந்தூர்பாண்டியன் (தினகரன் தரப்பு வழக்கறிஞர்): தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக தீர்ப்பளித்துள்ளது. பெரும்பான்மை எம்பி, எம்எல்ஏக்களின் அடிப்படையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே அளவுகோலை ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்தபோது தேர்தல் ஆணையம் எடுக்காதது ஏன்? அதிமுக கட்சி விதிகளின்படி தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். தீர்ப்பு வருவதற்கு முன்பே இரட்டை இலை கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியிருக்கிறார். இதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x