Published : 11 Nov 2017 04:17 PM
Last Updated : 11 Nov 2017 04:17 PM

சென்னை, கடலோர மாவட்டங்களில் 2-வது சுற்று பருவமழை இன்றிரவு தொடங்குகிறது; கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்

வடக்கு கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் இரண்டாவது சுற்று இன்றிரவு முதல் தொடங்குகிறது என வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் (https://www.facebook.com/tamilnaduweatherman/) கூறியிருப்பதாவது:

வடக்கு கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் இரண்டாவது சுற்று இன்றிரவு முதல் தொடங்குகிறது. வழக்கமாகவே, வடகிழக்கு பருவமழையானது காற்றழுத்த தாழ்வு நிலைகள் சார்ந்தது. ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்போது 3 முதல் 4 நாட்களுக்குத் தொடர்ந்து மழை பெய்யும். ஆனால், கடந்த முறை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து 9 நாட்களுக்கு மழை தந்தது. அதன்பின்னர், கடந்த மூன்று நாட்களுக்கு நமக்கு பெரிய அளவில் மழை இல்லை. தற்போது, 2-வது காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதன்மூலம், நாகப்பட்டினம் முதல் சென்னைவரையிலான வடக்கு கடலோர மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

எங்கே நிலைகொண்டுள்ளது? எப்படி இருக்கிறது?

இந்த 2-வது காற்றழுத்த தாழ்வுநிலையானது வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. அதேவேளையில் இது ஒரு பரந்த தாழ்வுநிலையாக இருக்கிறது. அதாவது, மிகப் பெரிய பரப்பளவில் மேகக்கூட்டங்கள் உள்ளன. மேகக்கூட்டங்கள் நெருக்கமாக இல்லை. தென்மேற்கு பகுதியில் எப்போதெல்லாம் காற்றழுத்த தாழ்வு, நிலை கொள்கிறதோ அப்போதெல்லாம் வடக்கு கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நல்ல மழை பெயும். மற்ற பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யும்.

இந்த காற்றழுத்த தாழ்வானது ஆந்திரா நோக்கி நகரும் என பிபிசி கணித்தூள்ளது. ஆனால், சென்னைக்கு மழை வாய்ப்பு குறித்து எதுவும் கூறவில்லை. சென்னையில் எப்படி மழை வெளுத்துவாங்கப்போகிறது என்பதை நீங்கள் பாருங்கள்.

இன்று இரவு முதல் மழை..

சென்னையில் இன்றிரவு மழை தொடங்கும். புதன்கிழமை வரை விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் கனமழையும், சில நேரங்களில் மிககனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிககனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.

வேலூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x