Published : 14 Nov 2017 04:45 PM
Last Updated : 14 Nov 2017 04:45 PM

பெண்ணே பிறக்காத ஒரு வம்சம்; ஆவியடித்து செத்த ஆண் வம்சம்: கற்பனை கடந்த பசுவீஸ்வரி, ஆரவல்லி- சூரவல்லி கதை!

 

அகத்தியர், துர்வாசர்னு ஆதிகாலத்து மாமுனிவர்கள்தான் சாபம் விட்டாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா பசு ஒண்ணு ஒரு மனுச குலத்துக்கே, 'பசு மாடு பால்கறந்தா பால் வரும். ஆனா வெண்ணெய் வராது. அந்த வகையறாவுல கல்யாணம் கட்டற பொம்பளைகளுக்கு, ஆம்பளைப் புள்ளைக எத்தனை வேண்ணா பொறக்கும். ஆனா பொம்பளை புள்ளைக பொறக்கவே பொறக்காது!'ன்னு வித்தியாசமா சாபம் கொடுத்ததை யாராவது கண்டதுண்டா; கேட்டதுண்டா?

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி, வனபத்திரகாளியம்மன் கோயில் தாண்டி நந்தவனத்தோட்ட, வனாந்திரத்துல இருக்கிற பசுவீஸ்வரி கோயிலுக்கு போனீங்கன்னா குட்டியா ஒரு கோயில் இருக்கும். அதில் ஒரு அம்மனும், பசுவும் கன்னும் வைக்கப்பட்ட சிலையும் இருக்கிறது. இந்த கோயிலை ஒட்டி ஆடு,மாடு மேய்ப்பவர்களிடம்தான் இந்த கதை உலாவுகிறது.

''இது கதையல்ல அப்புனு. நிஜம். அது மட்டுமில்ல, இங்கே ஆரவல்லி, சூரவல்லி கோட்டை இருந்துச்சா. அதைத் தாண்டி பகாசூரன் மலை இருந்துச்சா. அதுக்கு பீமன் களியுருண்டை கொண்டு போய் சூரனையும் கொன்னானா. அதுல இங்கே ஆம்பளைக பகாசூரன் காத்தடிச்சு ஆம்பளைக வயிறு வீங்கி செத்தும் இருக்காங்க. இது ஒங்கொப்புராணை!'' என ஆரம்பித்தார் இங்கே மாடு மேய்க்கும் 60 வயது கடந்த ரங்கசாமி.

''இங்கிருந்து அரை மைல் தூரம்தான் பவானியாறு. இங்கிருந்து ஒரு காட்டாறு அந்த ஆத்துல சேர்ந்துட்டிருந்தது. அந்தக் காட்டாத்துல தண்ணி வத்தவே வத்தாது. ஆதிகாலத்துல இங்கே தேசியப்ப ராஜான்னு ஒரு ராசா ஆண்டுட்டு இருந்தார். அவருக்கு இளவரசியா ஒரு மகள். அவரோட பண்ணையத்துல ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள்னு பட்டி ரொம்பி கிடந்துச்சு. ஒரு நா அந்தி நேரம். ஒரு காளை, தன் ஜோடியோட இணை சேர்றது பார்த்த இளவரசி களுக்குன்னு சிரிச்சிட்டா. அதுல பசுவுக்கு வந்துச்சு பாரு கோவம்.

'அடியே மகளே. நா ஈசுவரனுக்கு பால் கொடுக்கிற பசுவீஸ்வரி. என்னைப் பார்த்தா எளக்காரமா சிரிச்சே. என் வயித்துல வரப்போற கரு உன் கருவா மாறட்டும்!'னு சொல்லிடுச்சு. அதுல இளவரசி வயித்துல பசுவோட கரு வளர ஆரம்பிச்சுடுச்சு. அது ஒரு நா ராசாவுக்கு தெரிஞ்சு ஆட்டமா ஆடினார். இதுக்கு யாரும் அப்பனில்ல. பசுவோட கருன்னு பொண்ணு சொன்னதை நம்ப மறுத்தான். 'இப்படி குலப்பெருமையை கெடுத்த இவளோட வயித்தைக் கிழிச்சு, அந்தக் கருவை எங்கிட்ட கொண்டு வாங்க!'ன்னு கட்டளை போட்டான். ஏவலாளிக இளவரசிய இழுத்துட்டுப் போனாங்க. ஓடைத்தண்ணிய தாண்டி கொண்டு போகும்போது அவ அழுதா. அரற்றினா. உண்மையை அவங்ககிட்டவும் சொல்லி விட்டுடும்படி கதறினா. அவங்க கேட்கல.

அதுல சினகரமான இளவரசி, ''நான் சொல்றது உண்மையானா, என் கரு அறுக்கும்போது, இந்த ஓடையில உங்க கத்திய கழுவ தண்ணியில்லாம போகட்டும். உங்களுக்கு உத்திரவிட்டான்ல மூட ராஜா. அவன் வம்ச விருத்திக்கு பொம்பளைப் புள்ளையே பொறக்காம போகட்டும்''னு சபிச்சாங்க.

அவுங்க சபிச்ச மாதிரியே அவள் வயித்தை கிழிச்சதும், முன்னாடி ஓடிகிட்டிருந்த காட்டாறு சுத்தமா வறண்டிருச்சு. அவங்க வயித்துலயிருந்து ஒரு பசுக்கரு நெளிஞ்சு, புரண்டு உயிரை உட்டுச்சு. கத்திகழுவவும் தண்ணியில்லை. ஏவலாளுக ராசாகிட்ட நடந்ததை சொல்ல, அவர் பதறிட்டார். செத்துக்கிடந்த பொண்ணை மடியில போட்டு அழுதான். அங்கேயே பசுக்கன்றையும், பொண்ணையும் புதைத்து, அதுக்கு சிலை செஞ்சு, பூங்காவனமும் எழுப்பி பசுவீஸ்வரின்னு பேர் வச்சு கும்பிட்டுட்டு வந்தார். இப்பவும் அவரோட வம்சத்துல உள்ள குலக்காரங்க வருஷா வருஷம் வர்றாங்க. பொங்கல் படையல் எல்லாம் வைக்கிறாங்க. அவங்களுக்கு பெண் குழந்தை பொறக்கறதேயில்லைங்கிறாங்க. இங்கே ஓடின காட்டாறும் வறண்டது, வறண்டதுதான், காய்ஞ்ச பள்ளமாவே கிடக்கு பாருங்க!'' என்று பசுவீஸ்வரி கதை சொல்லி முடித்த ரங்கசாமி, அடுத்து சொன்னது ஆரவல்லி, சூரவல்லி கதை.

 

''இங்கே ஒரு பாதாள மண் கோட்டை இருந்துச்சு. அதுலதான் ஆரவல்லி, சூரவல்லி இருந்துகிட்டு ஆட்சியாண்டாங்க. அவங்களுக்கு ஆம்பிளைக வாசமே ஆகாதுல்ல. அதுல இங்கே வர்ற ஆம்பிளைக திடீர், திடீர்னு வயிறு உப்பி செத்துடுவாங்க. ஆரவல்லி, சூரவல்லி காத்துப்பட்டுத்தான் (ஆவி) அவங்க செத்தாங்கன்னு பேச்சாயிருக்கும். அதுக்கேத்த மாதிரி அந்த காலத்துல நிறைய வெள்ளைப்புடவைக்கார பொம்பளைகளா (விதவைகள்) இருப்பாங்க. ஆத்துக்கு அப்பால இருக்கிற பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வர்றவங்க கூட அதனால இங்கே வரமாட்டாங்க. இப்ப பத்திருபது வருஷமா, அதுவும் நெல்லித்துறை பவானி ஆத்துப் பாலம் போட்ட பின்னாடிதான் பயமில்லாம ஜனங்க இங்கே வந்து போறாங்க!'' என முடித்தார்.

ரங்கசாமி சொன்ன இதுவும் கற்பனைக்கதையோ, புராணக்கதையோ, நாட்டார் கதையோ தெரியாது. ஆனால் இங்கே ஆரவல்லி சூரவல்லி நினைவாக நூற்றாண்டுகள் பழமையான ஒரு புளியமரத்தடியில் சில சிலைகளும், கிராமத்தவர்கள் வழிபடுதலும் கூட இப்போதும் நடந்து கொண்டுதானிருக்கிறது. அதேபோல் மேட்டுப்பாளையம் தாண்டி உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு சமூகத்தில் உள்ள ஒரு குலத்தவர்களுக்கு இப்போதும் பெண் மகவு பிறப்பதில்லை என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத ஊர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x