

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிரதான அணையான பாபநாசம் அணையிலிருந்து கார் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார். இதன்மூலம் 18,090 ஏக்கர் நேரடி பாசன வசதி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பாசனத்துக்கு பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு பாபநாசம் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன், மு. அப்துல்வகாப் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் தமிழக சட்டப் பேரவை தலைவர் கூறியதாவது: கார் சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாபநாசம் நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தாமிரபரணி பாசனத்தின் கீழ் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் (2260 ஏக்கர்), தெற்கு மேடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர் ), நதியுண்ணி கால்வாய் (2460 ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12500 ஏக்கர்) என்று பிரதான கால்வாய்கள் மூலம் மொத்தம் 18090 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும். இதுபோல் 35 குளங்களுக்கு தண்ணீர் பெருகும். கார் சாகுபடிக்காக வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.
தொடர்ந்து 105 நாட்களுக்கு நீர்இருப்பு மற்றும் நீர்வரத்தை பொருத்து சுழற்சி முறையில் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன்பெறும். எதிர்வரும் நாட்களில் நீாத்தேக்கங்களில் எதிர்பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறப்படாத பட்சத்தில் நீர்வளத்துறையினரின் வழிகாட்டுதலின்படி சுழற்சி முறையில் தண்ணீரை சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். தற்போது அணையிலிருந்து 700 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் வட்டி இல்லா கடன்களை பெற்று விவசாயம் செய்து அதிக லாபம் பெற வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்குவதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் விவசாயிகள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்தார்.
தாமிரபரணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜன், பேச்சிமுத்து, விக்கிரமசிங்கபுரம் நகர்மன்ற தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், அம்பாசமுத்திரம் நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவன்பாண்டியன் (எ) பரணி சேகர், களக்காடு நகர்மன்ற துணை தலைவர் பி.சி ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.