நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கருணை காட்ட முடியாது: ஐகோர்ட்

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கருணை காட்ட முடியாது: ஐகோர்ட்
Updated on
1 min read

மதுரை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கருணைக் காட்டக்கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

நெல்லையைச் சேர்ந்த ஞானபிரகாசம், கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அதிகாரிகளிடம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற பல்வேறு வாய்ப்புகள் வழங்கியும் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஒரு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு எது சரி? எது தவறு? என தீவிர ஆலோசனை நடத்திய பிறகு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அந்த உத்தரவுகளை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்துவதில்லை.

நீதிமன்ற உத்தரவு தானே என்ற அலட்சிய போக்குடன் அதிகாரிகள் உள்ளனர். இதனை ஏற்கமுடியாது. இது போன்ற அவமதிப்பு வழக்குகளின் அடிப்படையில் ஒரு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்பினால் தான் சரியாக இருக்கும். அது தான் நீதியாகவும் இருக்கும்.

மக்கள் வரிப்பணத்தில சம்பளம் பெற்றுக் கொண்டு, அதற்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதை ஏற்க முடியாது. நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற அதிகாரிகள் மீது கருணை காட்டக் கூடாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் அது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். விசாரணை ஜூலை 24க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in