Published : 19 Jul 2023 06:53 PM
Last Updated : 19 Jul 2023 06:53 PM

ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி பேசியது ‘ப்ளாக் காமெடி’ - முதல்வர் ஸ்டாலின் பதிலடி

சென்னை: "ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் கட்சியினரை அருகருகே வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றம்சாட்டி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் பேசியது ‘ப்ளாக் காமெடி’ எனப்படும் வேடிக்கையான வேதனை" என்று முதல்வர் ஸ்டாலின் பதிலடி தரும் வகையில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திமுகவினருக்கு, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்த இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஜூலை 17-ஆம் நாள் காலையில் நான் பெங்களூருக்குப் புறப்படும் நேரத்தில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான பொன்முடியும், அவரது மகன் கவுதம சிகாமணி எம்பியையும் குறி வைத்து, அமலாக்கத் துறையை ஏவி, சோதனை நடத்தியது ஒன்றிய பாஜக அரசு.

திமுக இதுபோன்ற சோதனைகளை, மிரட்டல்களை, நெருக்கடிகளைக் கடந்து நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கம். அதனைக் கட்டிக்காத்த மறைந்த முதல்வர் கருணாநிதி எந்தவொரு சோதனையான காலகட்டத்தையும் எதிர்கொண்டு மீண்டு வரும் பேராற்றலை எங்களுக்குப் பயிற்றுவித்திருக்கிறார். பழிவாங்கும் போக்குடன் பச்சையாக அரசியல் செய்யும் பாஜக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமான வெற்றியை எளிதாக்கி வருகின்றன என ஊடகத்தினரிடம் தெரிவித்துவிட்டு பெங்களூரு புறப்பட்டேன்.

கடந்த ஜூன் 24-ம் நாள் பிஹார் தலைநகர் பாட்னாவில் திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்குச் சில நாட்கள் முன்பாக திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை ஏவப்பட்டதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். திமுக மீது மட்டுமின்றி, பாஜகவின் மதவாத - ஜனநாயக விரோத - எதேச்சாதிகாரத் தன்மையைக் கொள்கைப்பூர்வமாக எதிர்க்கின்ற கட்சியினர் மீது அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளை ஏவிவிடுவதும், எதிர்க்கட்சி வரிசையில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பாஜகவுக்குத் தாவி வந்தால் அவர்களுக்குப் புனிதநீர் தெளித்து ‘புண்ணியவான்’கள் ஆக்கிவிடுவதும் நாடறிந்த ரகசியம்தான். நாம் தனியாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

அமலாக்கத் துறையை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோதப் போக்கை தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் மட்டுமின்றி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.

அமலாக்கத் துறையின் அத்துமீறல்களையும் நள்ளிரவு கடந்த விசாரணையையும் ஜனநாயகத்துக்கு அச்சமூட்டும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

பாஜகவின் ‘பண்பு’ அப்படிப்பட்டது என்பதை நன்கறிந்த அரசியல் இயக்கங்களின் ஒருங்கிணைப்பாக நேற்றும் (ஜூலை 18), அதற்கு முந்தைய நாளும் (ஜூலை 17) கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் நடந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சரத் பவார், லாலு பிரசாத், ஃபரூக் அப்துல்லா , பிஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, மேலும் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சித் தலைவர்கள் என ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட - பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைக் காத்திட வேண்டும் என்பதில் உறுதி கொண்ட - மதவாதமற்ற சகோதரத்துவமான இந்திய ஒருமைப்பாட்டை பேணிப் பாதுகாத்திட வேண்டும் என்ற லட்சியம் கொண்ட 26 கட்சிகளின் ஒருங்கிணைப்பாக பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒருமித்த சிந்தனையுடன் ஒன்றுபட்டிருக்கும் இயக்கங்கள் அடங்கிய கூட்டணிக்குப் பொருத்தமான ஒரு பெயர் பற்றிய ஆலோசனைகளும் சிந்தனைகளும் வெளிப்பட்டபோது, அனைவரும் ஏற்றுக்கொண்ட பெயர்தான் இந்தியா. INDIA (Indian National Developmental Inclusive Alliance) இந்திய ஒன்றியம் முழுவதும் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இந்திய மாநிலங்கள் அனைத்தும் பாரபட்சமின்றி ஒருங்கிணைந்த வளர்ச்சியினைப் பெற வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட இந்தியா ஒருமைப்பாட்டுடன் திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டது.

ராகுல் காந்தி, இந்தியா என்ற கூட்டணியின் பெயரை முன்மொழியுமாறு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியிடமும், வழிமொழியுமாறு உங்களில் ஒருவனும் தமிழகத்தின் முதல்வருமான என்னிடம் அன்புடன் கேட்டுக் கொண்டார். அதன்படியே கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டது.

எதிர்க்கட்சிகள் கூடுவது போட்டோ எடுக்கத்தான் என வெளியில் கேலி பேசிய பாஜக தலைமைக்கு உள்ளுக்குள் பயம் ஆட்டிப் படைத்தது. மத்திய பிரதேசத்தில் தனது கட்சி நிர்வாகிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோதும், அந்தமானில் பேசியபோதும் எதிர்க்கட்சிகளை, குறிப்பாக திமுகவைத் தேவையின்றி விமர்சித்துப் பேசினார். பெங்களூரு நகரில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட நிலையில், அவசர அவசரமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டது.

அதிமுகவின் ஒரு பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் பழனிசாமி உள்பட பல கட்சியினரும் விழுந்தடித்து ஓடி, தங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகினர். அவர்களை விட்டால் இவர்களுக்கு ஆளில்லை. இவர்களை விட்டால் அவர்களுக்கு ஆளில்லை. இருதரப்புக்கும் மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பதுதான் உண்மையான நிலைமை. ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் கட்சியினரை அருகருகே வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றம்சாட்டி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் பேசியது ‘ப்ளாக் காமெடி’ எனப்படும் வேடிக்கையான வேதனை.

இவர்களிடமிருந்து இந்தியாவைக் காத்திடவும், 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட இந்தியாவையும் அதன் ஜனநாயகத் தன்மையைக் காத்திடவும் பெங்களூரு நகரில் உண்மையான இந்தியா உருவாகியிருக்கிறது. இத்தனை நாள் இந்தியாவின் தேசபக்திக்கு தாங்கள் மட்டுமே ஒட்டுமொத்த குத்தகைதாரர்கள் போல செயல்பட்டு வந்த பாஜகவினரும் அதன் பரிவாரத்தினரும், ஜனநாயக இயக்கங்களின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டியதும், அந்தப் பெயரை உச்சரிப்பதற்கே தயக்கம் காட்டியதன் மூலம், அவர்களின் போலி தேசபக்தி முகமூடி கழன்று தொங்குவதைக் காண முடிகிறது.

இந்தியா என்ற சொல் இப்போது அவர்களுக்குப் பிடிக்காத சொல்லாகிவிட்டது. இந்தியாவைப் பிடிக்காவிட்டால் ‘பாகிஸ்தானுக்குப் போ’ என மதவாத சிந்தனையுடன் பேசிய பாஜகவினர் இப்போது எந்த நாட்டுக்கு விசா வாங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்து பாஜகவுக்கும் - அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பவர்களுக்கும் ‘விசா‘ வழங்கி வெளியே அனுப்பிட மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். அதனை மறைக்கத்தான் அமலாக்கத்துறை தொடங்கி அத்தனை அமைப்புகளையும் ஏவி அச்சுறுத்தும் வேலைகள் நடக்கின்றன. ‘இந்தியா’வில் உள்ள யாரும் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை. உண்மையான இந்தியாவின் எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டியதே நமது முதன்மையான பணி” என்று முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

முன்னதாக, எதிர்க்கட்சிகளுக்கு குடும்பம்தான் முக்கியம், நாட்டைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை என எதிர்க்கட்சிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்தார். அதன் விவரம்: எதிர்க்கட்சியினருக்கு குடும்பம்தான் முக்கியம்: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x