

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் 169 கி.மீ. நீளத்தில் 897 தார்சாலைப் பணிகளும், ரூ.20.69 கோடி மதிப்பீட்டில் 24 கி.மீ. நீளத்தில் 196 சிமெண்ட் கான்கிரீட் சாலைப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியில் 2023-24ம் நிதியாண்டில் ரூ.433.28 கோடி மதிப்பீட்டில் 3,676 எண்ணிக்கையிலான 645.60 கி.மீ. நீளமுடைய சாலைப் பணிகள் மேற்கொள்ள ஒப்பங்கள் கோரப்பட்டது. இதில் தற்போது கடந்த இரண்டு மாதங்களில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் 169 கி.மீ. நீளத்தில் 897 எண்ணிக்கையிலான தார்சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், ரூ.20.69 கோடி மதிப்பீட்டில் 24 கி.மீ. நீளத்தில் 196 சிமெண்ட் கான்கிரீட் சாலைப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட மடிப்பாக்கம், ஆலந்தூர் மண்டலத்துக்கு உப்பட்ட மணப்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட வளசரவாக்கம் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் கொசஸ்தலையாறு வடிநில திட்ட நிதியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் 703 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர்வடிகால் பணிகளில் 119.57 கி.மீ. நீளத்துக்கும், கோவளம் வடிநில திட்ட நிதியின் கீழ் கோவளம் வடிநிலப் பகுதியில் 160 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர்வடிகால் பணிகளில் 48 கி.மீ. நீளத்துக்கும், மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் 60 கி.மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 2.55 கி.மீ. நீளத்துக்கும், சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 7.40 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 2.77 கி.மீ. நீளத்துக்கும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிதியின் கீழ் 1 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 0.39 கி.மீ. நீளத்துக்கும் தொடர்ந்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.