Published : 19 Jul 2023 03:13 PM
Last Updated : 19 Jul 2023 03:13 PM
சென்னை: "மத்திய அரசின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கிழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.257 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு காரணங்கள் கூறி, கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படவில்லை" என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு உடனடி விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, “மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக, மென்பொருள் பதிவேற்றத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மறு பதிவேற்றத்தில் ஏற்பட்டுள்ள காலதாமதங்களை மறுபதிவேற்றம் செய்து, விரைவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நிதியுதவி தொகை கொடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்ப்பிணிப் பெண்கள் நலனுக்காக, மத்திய அரசின் மாத்ரு வந்தனா திட்டம், கடந்த 2017ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1987-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்துடன் இணைந்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஐந்து தவணையாக ரூ.14,000 மற்றும் ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் நிதி உதவியில் 60 சதவீதம் மத்திய அரசு நிதியாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ரூ.257 கோடி நிதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு காரணங்கள் கூறி, கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படவில்லை என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளது. ஊழல் திமுக அரசின் இந்த மெத்தனப் போக்கை, தமிழக பாஜக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் ஊழல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டு வருகின்றன. மகளிருக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தினார்கள். பட்டியல் பிரிவு மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய பல ஆயிரம் கோடி நிதியை பயன்படுத்தாமலேயே திருப்பி அனுப்பினார்கள். தமிழக பள்ளி மாணவர்களைத் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பாமல் அவர்கள் வாய்ப்புகளைப் பறித்தார்கள். அரசு மாணவர் விடுதிகளுக்கான அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றாமல் புறக்கணித்திருக்கிறார்கள்.
தற்போது, கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவித் திட்டத்தையும், கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கி இருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. மத்திய அரசு ஒதுக்கும் நிதி, நம் சகோதரிகளுக்குச் சென்று கிடைக்கவில்லை என்றால், இந்த நிதி எங்கே செல்கிறது?
கர்ப்பிணிப் பெண்களை அலைக்கழிக்கும் மெத்தனப் போக்கை இந்த ஊழல் திமுக அரசு விட்டுவிட்டு, உடனடியாக அவர்களுக்கான நல நிதியை வழங்க வேண்டும் என்றும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் விளையாடக் கூடாது என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசு விளக்கம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கைக்கு விளக்கம் அளித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: ‘டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் 2006-ம் ஆண்டு ரூ.6000 என ஆரம்பிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு 2011-2012 ரூ.12,000 மற்றும் தற்பொழுது ரூ.18,000 ஆக உயர்த்தி முதல் இரு கர்ப்பத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரூ.4,000 ரூபாய்க்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்களும் ரூ.14,000 பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
முதல் கர்ப்பத்துக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்துடன் இணைந்து ரூ.5,000-ம் (மத்திய அரசின் பங்காக ரூ.3,000-ம் மாநில அரசின் பங்காக ரூ.2,000-ம்) டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.18,000-ல் மாநில அரசு ரூ.15,000- (2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் உட்பட) வழங்குகிறது. மத்திய அரசு ரூ.3,000-ம் மட்டுமே வழங்குகிறது.
2-வது கர்ப்பத்துக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நேரடியாக 5 தவணை ரூ.14,000- மற்றும் 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள், இரண்டுக்கு மேற்பட்ட கர்ப்பங்களுக்கும், புலம் பெயர்ந்த கர்ப்பிணிகளுக்கும் ரூ.4,000 மற்றும் 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2006 முதல் இதுவரை 11,702 கோடி நிதியானது 1,14,51,567 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் மூலம் 2018-2019-லிருந்து, முதல் கர்ப்பத்துக்கு மட்டும் ரூ.5,000- வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.3000-ம் மாநில அரசின் மூலமாக ரூ.2,000-ம் பெறப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.9,000 அதே முதல் கர்ப்பத்துக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலமாக வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் பயனாளியின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் ரு.14,000-ல் மத்திய அரசின் சார்பாக ரூ.3,000-ம் மாநில அரசின் சார்பாக ரூ.11,000-ம் வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டமானது தமிழகத்தின் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துடன் ஒன்றிணைந்து செயல்பட கூடியவகையில், முதல் கர்ப்பத்துக்கு மட்டும் 3 தவணைகளில் கர்ப்ப காலத்தில் 3-வது 4-வது மாதங்களிலும், குழந்தை பிறந்தவுடன் 4-வது மாதத்திலும் மொத்தம் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. இரு திட்டங்களையும் ஓன்றிணைக்கும் வகையில், தமிழக அரசின் சார்பாக டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.3000 மேற்கண்ட தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், அதே கர்ப்பிணிக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மூலமாக ரூ.4,000 குழந்தை பிறந்தவுடனும், குழந்தை பிறந்து 10-வது மாதத்தில் ரூ.2,000-ம் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.
2018 முதல் 2023 வரை, மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் மொத்தம் 597.8 கோடி (353.88 மத்திய அரசு; 243 தமிழக அரசு) ஒதுக்கப்பட்டு அதில் 446 கோடி (267.71 மத்திய அரசு, 178 தமிழக அரசு) செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் கர்ப்பத்தில் 10,70,765 கர்ப்பிணிகளுக்கு பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் மூலமாக நிதியுதவி தொகை கிடைக்கப்பெற்றுள்ளது.
பிரதம மந்திரி மாத்ரு வந்தன யோஜனா திட்டத்துக்கு மத்திய அரசின் பங்காக (60%) 2018-19ல் 111.24 கோடியும், 2019-20ல் 46.21 கோடியும், 2020-21ல் 93.39 கோடியும், 2021-22ல் 35.02 கோடியும், 2022-23ல் 68.03 கோடியும் மொத்தமாக 353.88 கோடியில் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 2018-19ல் 25.73 கோடியும், 2019-20ல் 88.86 கோடியும், 2020-21ல் 78.77 கோடியும், 2021-22ல் 45.51 கோடியும், 2022-23ல் 28.83 கோடியும் மொத்தமாக 267.71 கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 5,36,192 கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு தேசிய நலக்குழுமம் PICME-லிருந்து, தேசிய தகவல் மையம், சென்னை மூலமாக பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில் ஆன்லைன்-ல் பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக திருப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட குறைகளை களைவதற்காக, முதன்மை செயலர் மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு, 13.06.2022, 17.10.2022 மற்றும் 12.12.2022 ஆகிய நாட்களில் 3 முறை ஆய்வு கூட்டம் நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தமிழ்நாடு தேசிய திட்ட குழுமம் சார்பாக தேசிய தகவல் மையம், சென்னை குழுவானது, 11.01.2023, 01.05.2023 ஆகிய தினங்களில் புதுடெல்லி தேசிய தகவல் மையத்துக்கு சென்று, மென்பொருள் பொறியாளர்களுடன் நேரடியாக ஆய்வு கூட்டம் நடத்தி பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 1.0-ல் உள்ள குறைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக, மென்பொருள் பதிவேற்றத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மறு பதிவேற்றத்தில் ஏற்பட்டுள்ள காலதாமதங்களை மறுபதிவேற்றம் செய்து, விரைவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நிதியுதவி தொகை கொடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மென்பொருளில் தமிழக அரசின் PICME 2.0 இணையதளத்திலிருந்து நேரடியாக பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழ்நாடு அரசால் நிறுத்திவைக்கப்படவில்லை. சிறிது காலதாமதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி நிதியுதவி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT