2024-ல் புதிய இந்தியா உருவாகும்: பெங்களூரு கூட்டத்துக்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: 2024-ல் புதிய இந்தியா உருவாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பெங்களூருவில் கூட்டம் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடந்தது. இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் நலன் போன்றவை நெருக்கடியில் சிக்கியுள்ளன.

வெற்றிக்கு வியூகம்: சர்வாதிகாரத்தில் நாடு சிக்கி சிதையுண்டு சென்றுகொண்டிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதை மையமாக கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்துள்ளன. பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் 16 கட்சிகள் பங்கேற்றன. பெங்களூருவில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றுள்ளன. தமிழகத்தில் எப்படி கூட்டணி அமைத்து வெற்றி பெற்று வருகிறோமோ, அதுபோல் இந்தியா முழுவதும் இதுபோன்ற கூட்டணி அமைத்து வெற்றி பெற வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் கொள்கை கூட்டணியாகவும், மாநில அளவில் தேர்தல் கூட்டணியாகவும் அமையும். பாட்னா,பெங்களூரு கூட்டத்தால் மிகப்பெரிய மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சி இந்தியாவுக்கு தரும் மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த கூட்டணிக்கு 'இண்டியா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தை மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசப்படும். 2024-ல் புதிய இந்தியா உருவாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சூழ்நிலையில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன். ஆனால், இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. அதுதொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம்.

பல கொடுமைகள் நடக்கும்: அமலாக்கத்துறை சோதனை என்பது எதிர்ப்பார்த்ததுதான். இன்னும் போக, போக பல கொடுமைகள் நடக்கும். அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அனைத்தையும் சட்ட ரீதியாக சந்திப்போம். பாஜக கூட்டணியில் இருப்பவர்களின் வழக்குகளை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். ஊழல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துள்ளன என்று பிரதமர் சொல்கிறார். டெல்லியில் இன்று நடந்த கூட்டத்தில் அவரால் குற்றம்சாட்டப்பட்ட, அவரால் ஊழல்வாதிகள் என சொல்லப்பட்டவர்கள் எல்லாம், அவர்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர். ஊழல் கட்சிகள் என்று அவர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in