330 அரங்குகளுடன் ஜூலை 21 முதல் கோவை புத்தக திருவிழா தொடக்கம்

330 அரங்குகளுடன் ஜூலை 21 முதல் கோவை புத்தக திருவிழா தொடக்கம்
Updated on
1 min read

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா இணைந்து 7-வது ஆண்டாக நடத்தும் கோவை புத்தக திருவிழா ஜூலை 21-ம் தேதி தொடங்கி, 30-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் 330 அரங்குகளில் லட்சக்கணக்கான தலைப்புகளில், புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. விழாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத் மற்றும் புதுடெல்லி போன்ற பல்வேறு இடங்களில் இருந்து புகழ் பெற்ற பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

வரும் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆகியோர் விழாவை தொடங்கி வைக்க உள்ளனர்.

தினந்தோறும் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும், கலைஞர்களும் கலந்துகொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பள்ளிக் கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் இலக்கிய நிகழ்வுகள், கதை சொல்லும் நிகழ்வுகள், பேச்சுப் போட்டிகள், சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி, வினாடி வினா ஆகியனவும் நடைபெறவுள்ளன.

நுழைவுக் கட்டணம் இல்லை: புத்தக திருவிழா நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அவிநாசி சாலையிலிருந்து கொடிசியா செல்வதற்கு ஏதுவாக இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை. கண்காட்சி தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

அரசுப் பள்ளி மாணவர்கள் புத்தக கண்காட்சியை காண வாகன வசதி செய்து தரப்படும். தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கொடிசியா தலைவர் வி.திருஞானம், புத்தக திருவிழா தலைவர் கே.ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in