கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் ‘ஆவின்’ பாலகங்கள்

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் ‘ஆவின்’ பாலகங்கள்
Updated on
1 min read

கோவை: கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆவின் பொருட்களான பால், பால்கோவா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படாமல், டீ, காபி, வடை, பஜ்ஜி, இட்லி, தோசை உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், ஆவின் பெயரில் பாலகங்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து, கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் லோகு ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: எங்கள் அமைப்பு சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விகளுக்கு ஆவின் நிர்வாகம் அளித்த பதிலில், பாலகங்கள் அமைக்க அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும், ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஆவின் பெயரை பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

ஆவின் பாலக கடைகளுக்கு மின் இணைப்பு பெற வழங்கப்பட்ட தடையின்மை சான்றை விலக்கி கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலை, மாநகராட்சி மற்றும் வருவாய் துறைகளுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 22, ஜூலை 5 ஆகிய தேதிகளில் கடிதம் அனுப்பியுள்ளது. சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட ஆவின் பாலகங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், ஆவின் நிறுவனம் கோவை மாநகராட்சி, வருவாய்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.

இருப்பினும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அரசு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறும்போது,‘‘ஆவின் பாலகங்களுக்கு மின் இணைப்பு வழங்க தடையின்மை சான்றிதழ் தற்போது வழங்கப் படுவதில்லை. ஆவின் நிர்வாகம் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இது தொடர்பாக ஆவின் நிறுவன உயரதிகாரி கூறும்போது, ‘‘விதிகளை மீறியதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, பாலகங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. மேல் நடவடிக்கைக்காக மாநகராட்சியிடம் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் அந்த பாலகங்களை ஆக்கிரமிப்பாக கருதி அவற்றை அகற்றி வருகின்றனர்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in