Published : 10 Nov 2017 05:42 PM
Last Updated : 10 Nov 2017 05:42 PM

ஜெர்மன் பெண்ணை மணந்த கோவில்பட்டி இளைஞர்: தமிழ் முறைப்படி தாலி கட்டினார்

ஜெர்மன் பெண்ணை கோவில்பட்டியைச் சேர்ந்த வாலிபர், காதலித்து தனது ஊரில் பெற்றோர், உறவினர் முன்னிலையில் தமிழ் முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வைரமயில். இவர் ஜெர்மன் நாட்டில் எந்திரவியல் நிறுவனத்தில் தர மேலாண்மை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றுபவர் பீட்ரிச்.

இருவரும் பணியிடத்தில் நட்பாகி, ஒன்றாகப் பழகினர். இந்தப் பழக்கம் காதலாக மாறியது. இருவரும் காதலித்தனர். பின்னர் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதையடுத்து இரு தரப்பிலும் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கினர். ஆரம்பத்தில் எதிர்த்த பெற்றோர் பின்னர் சம்மதித்தனர்.

இதையடுத்து இருவரின் திருமணத்தையும் மணமகனின் சொந்த ஊரான கோவில்பட்டியில் நடத்தத் திட்டமிட்டு, பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு விநியோகித்தனர். இன்று கோவில்பட்டியில் உள்ள திருமண மணடபம் ஒன்றில், தமிழ்க் கலாச்சார முறைப்படி மேள தாளம் முழங்க மணப்பெண் பீட்ரிச் கழுத்தில் மணமகன் வைர மயில் தாலி கட்டினார்.

மணப்பெண் பீட்ரிச்சும், மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் தமிழ்க் கலாச்சார முறைப்படி பட்டுச்சேலை, பட்டு வேட்டி சட்டை அணிந்திருந்தனர். விழாவிற்கு வந்த கிராம மக்கள் அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தனர். இந்த திருமண விழாவில் திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணப்பெண் பீட்ரிச், அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறிவிட்டு,  தான் தமிழ்க் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டதாகவும், உன்னதமான கலாச்சாரத்தை தமிழர்கள் கொண்டிருக்கிறீர்கள என்றும், தயவு செய்து அதைப் போற்றி பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர் தமிழில் நன்றி சொல்லி முடித்துக்கொண்டார்.

மணப்பெண் கிறிஸ்துவர் என்பதால் கிறிஸ்துவ முறைப்படி சர்ச்சிலும் திருமணம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x