

சென்னை: மோசடி வழக்குகளில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.35லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காவல் ஆணையர் அவற்றை பார்வையிட்டு, தனிப்படை போலீஸாருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஆவண மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் பருப்பு வர்த்தக நிறுவனத்தில் கையாடல் மற்றும் தனியார் மென் பொருள் நிறுவனத்தின் மென் பொருளை முறைகேடாகப் பயன்படுத்தி பண மோசடி என 2 மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 412 பவுன் நகைகள் மற்றும் ரூ.35 லட்சம் ரொக்கம், ஒரு கார், ஓர் இருசக்கர வாகனம், லேப்டாப், 5 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.67 லட்சத்தை முடக்கியுள்ளனர்.
இந்த 2 மோசடி வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளைக் கைது செய்து சொத்துகளை மீட்டமத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா, உதவி ஆணையர்கள் ராஜசேகரன், காவல் ஆய்வாளர்கள் ரேவதி,சுமதி உள்ளிட்ட தனிப்படையைச் சேர்ந்த26 பேரை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் பாராட்டினார். மீட்கப்பட்ட நகையின் மதிப்பு ரூ.2 கோடிஎன போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட நகை, பணம் வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இவற்றை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் பார்வையிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் மகேஷ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.