

சென்னை: ரயில் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஒப்பந்ததாரர்கள் செய்துதர உத்தரவிட்டுள்ளதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் அவெங்கடேசன் தெரிவித்தார்.
தேசிய தூய்மைப் பணி ஆணையத் தலைவர் வெங்கடேசன், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு தூய்மைப் பணியாளர்களின் நலன்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்துக் கேட்டறிந்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சென்னைபெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ரயில் நிலையத்தில் நடைமேடை, ரயில் தண்டவாளத்தில் பணியாற்றிய பெண் தூய்மைப் பணியாளர்களின் ஊதியம், பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் குறித்துக் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, சென்ட்ரல் ரயில்வே தலைமை அலுவலகத்தில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது: ரயில்வேயில் நேரடியாக பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை. ஆனால், தனியார் ஒப்பந்ததாரர்களின் கீழ்பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு போதியஅளவில் வசதிகள் ஏற்படுத்தப்படுவதில்லை. எனவே, அவர்கள் பணியாற்றும் இடங்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்.
ஒரு நாள் சம்பளமாக ரூ.736 வழங்க வேண்டும், கூடுதல் நேரம் (ஓவர் டைம்) பணியாற்றுவோருக்கு 2 நாட்களுக்கான சம்பளம் வழங்க வேண்டும், மாதாந்திர சம்பள ரசீது வழங்க வேண்டும், அவர்களின் அடையாள அட்டையில் பி.எஃப்., இ.எஸ்.ஐ. எண்களை சேர்க்க வேண்டும். மேலும், அவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடத்த வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். விதிகளை மீறும் தனியார் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வெங்கடேசன் கூறினார்.