Published : 19 Jul 2023 06:36 AM
Last Updated : 19 Jul 2023 06:36 AM

சட்டப்பேரவையைக் கூட்டி மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

சென்னை: சட்டப்பேரவையைக் கூட்டி மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை முதல்வர் கொண்டுவர வேண்டும் என சட்டப் பேரவைகாங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் விடுத்த அறிக்கை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மா என சட்டமேதை அம்பேத்கரால் விவரிக்கப்பட்ட 32-வது பிரிவை சாகடிக்கும் நோக்கில், தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அதிகார அமைப்புகளான அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, மத்திய புலனாய்வுத் துறை ஆகியவற்றை எதிர்க்கட்சியினரை பழிவாங்குவதற்கு மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது.

தமிழகத்தில் அண்மையில்திமுகவைச் சேர்ந்த 2 அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து அமலாக்கத் துறையினர் சோதனை, விசாரணை என்றபெயரில் மிகுந்த மனஉளைச்சலையும் உடல் நலக்குறைவையும் ஏற்படுத்தியுள்ளனர். விசாரணை அமைப்புகளை ஏவி, பாசிசப் போக்குடன் செயல்படும் மத்தியஅரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற நடவடிக்கைகளால் திமுகவை மிரட்டி பணியவைக்கப் பார்க்கிறது மத்திய அரசு.

ஆனால், அது ஒருபோதும் நடக்காது.கடந்த 9 ஆண்டுகளில் 3,500-க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருக்கிறது. இதில் ஆயிரம் வழக்குகளில்கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. 50 தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீதுகூட இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. தண்டனை பெற்றவர்கள் 30 பேர்கூட இல்லை.

எனவே, பாஜக ஆட்சியில் நடைபெறும் சோதனைகளின் நோக்கத்தை கேள்விக்குட்படுத்துவது அவசியமாக இருக்கிறது. எனவே மத்திய பாஜக அரசை கண்டிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி, மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x