

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான முகாம்களுக்கு, டோக்கன்கள் வீடுகளிலே நேரடியாக வழங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவுமுகாம் வரும் 24-ம் தேதிமுதல்ஆக. 4-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து 2-ம் கட்ட முகாம் வரும் ஆக. 5-ம் தேதிமுதல் ஆக. 16-ம் தேதிவரை நடைபெறுகிறது.
ரேஷன் கடைப் பணியாளர், முகாம்கள் நடைபெறும் நாள், நேரத்தை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கனை வீடுகளிலேயே நேரடியாக வழங்குவார். முகாம்நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள்முன்பாக டோக்கன் வழங்கப்படும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களைப் பெற ரேஷன்கடைகளுக்கு வரத் தேவையில்லை.
குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடைப் பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப பதிவுஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும் நடைபெறும். இது தொடர்பான சந்தேகங்களுக்கு சென்னை மாநகராட்சி அலுவலகக் கட்டுப்பாட்டு அறை எண் 044-25619208-ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.