

சென்னை: ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, ஆகஸ்ட் 3, 4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் த.ஆனந்த், மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் (2023-24) ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையவழியிலும், விடுதிகளில் பணியாற்றும் காப்பாளர்களுக்கு நேரடி முறையிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டு, விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
இதையடுத்து முதல்கட்டமாக ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதன்படி, பள்ளி தலைமையாசிரியர், முதுநிலை ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கு ஆக.3-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழாசிரியர் ஆகியோருக்கு ஆக. 4-ம் தேதியும் பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டமும் நடத்தப்பட உள்ளது.
கலந்தாய்வு இணையவழியில் நடைபெற உள்ளதால் அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இதில் எவ்வித தவறுகளும் நிகழாதவாறு உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.