மகளிர் உரிமைத் தொகை பயனாளரை தேர்வு செய்ய மதுரையில் 2 கட்ட முகாம்கள்

ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா | கோப்புப் படம்
ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா | கோப்புப் படம்
Updated on
2 min read

மதுரை: மதுரை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறும் என ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான பயனாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். பயனாளர்களை தேர்வு செய்ய மதுரை மாவட்டத்தில் 2 கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம் நடக்கவுள்ளது. முதல் முகாம் 24.07.2023 முதல் 4.8.2023 வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் 5.08.2023 முதல் 16.08.2023 வரையும் நடைபெறும்.

நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீட்டில் நேரடியாக நியாய விலைக்கடை பணியாளர் வழங்குவார். அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும்.

விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 0452 2532501 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

முதல் கட்ட முகாமில் மதுரை கிழக்கு தாலுகாவில் செட்டிகுளம் உட்பட 91 கிராமங்கள், மேற்கு தாலுகாவில் கொடி மங்கலம் உட்பட 21 கிராமங்கள், கள்ளிக்குடி தாலுகாவில் வில்லூர் உட்பட 42 கிராமங்கள், தெற்கு தாலுகாவில் சோளங்குருணி உட்பட 31 கிராமங்கள், திருமங்கலம் தாலுகாவில் கே.புளியங்குளம் உட்பட 56 கிரா மங்கள், வாடிப்பட்டி தாலுகாவில் மன்னாடிமங்கலம் உட்பட 77 கிராமங்களில் நடக்கும்.

மேலும், திருமங்கலம் நகராட்சி, வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைப் பகுதிகளில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். மதுரை மாநகராட்சியில் மதுரை கிழக்கு, மேற்கு, தெற்கு தாலுகாக் களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.

2-ம் கட்ட முகாம்கள் 5.08.2023 முதல் 16.08.2023 வரை மதுரை வடக்கு தாலுகாவில் தத்தனேரி, விளாங்குடி உட்பட 72 கிராமங்களிலும், மேலூர் தாலுகாவில் கருத்தம்புளியம்பட்டி உட்பட 84 கிராமங்களிலும், திருப்பரங்குன்றம் தாலுகாவில் பெருங்குடி, வலையங்குளம் உட்பட 27 கிராமங்களிலும், பேரையூர் தாலுகாவில் சேடபட்டி உட்பட 69 கிராமங்களிலும், உசிலம்பட்டி தாலுகாவில் பாப்பாபட்டி உட்பட 54 கிராமங்களிலும் முகாம்கள் நடைபெறும்.

மேலூர், உசிலம்பட்டி நகராட்சிப் பகுதிகளிலும், பரவை, அ.வல்லாளபட்டி, தே.கல்லுப்பட்டி, பேரையூர் எழுமலை ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைப் பகுதிகளில் இரண்டாம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.

மதுரை மாநகராட்சிப் பகுதியில் மதுரை வடக்கு, திருப்பரங்குன்றம் தாலுகாக்களுக்கு உட்பட்ட நியாய விலைக்கடைப் பகுதிகளில் இரண்டாம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். மக்கள் இம்முகாமைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in