Published : 18 Nov 2017 09:59 AM
Last Updated : 18 Nov 2017 09:59 AM

ஜிஎஸ்டி வரியை குறைத்தும் விலையைக் குறைக்காத உணவகங்கள்: மக்கள் கொதிப்பு; ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்

உணவகங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு, சில உணவகங்கள் உணவு பொருட்களின் அடிப்படை விலையை உயர்த்தியுள்ளன. இதனால் வரி குறைப்பின் பலனை மக்கள் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. இதில், ஏசி உணவகங்களுக்கு 18 சதவீதமூம், ஏசி அல்லாத உணவகங்களுக்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, உணவகங்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதைத்தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அனைத்து உணவகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரிக் குறைப்பு நவம்பர் 15-ம் தேதி முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக சில ஓட்டல்களில் பொருட்களின் விலையை பழைய வரி விதிப்புக்கு நிகராக உயர்த்தியுள்ளதால் வரி குறைப்பின் பலனை மக்கள் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உதாரணமாக, பிரபல ஓட்டல் ஒன்றில் வரி குறைப்பு அமலாவதற்கு முன்னர் ‘மினி லஞ்ச்’ விலை ரூ.105.88-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதோடு, ஜிஎஸ்டி 18 சதவீதம் சேர்த்து வாடிக்கையாளரிடம் மொத்தம் ரூ.125 கட்டணமாக பெறப்பட்டது. அதே ஓட்டலில் வரி குறைப்பு அமலான பிறகு ‘மினி லஞ்ச்’ விலை ரூ.124-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் சேர்த்து வாடிக்கையாளரிடம் இருந்து மொத்தம் ரூ.130 வசூலிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு பெரும்பாலான ஓட்டல்கள் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் மட்டும் ஓட்டல்களுக்கு 30 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்ட பிறகும் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்தினால் பாதிப்பு தொடரும். ஒவ்வொரு ஓட்டலும் தங்களுக்கு தகுந்தபடி உணவு பொருட்களின் விலையை நிர்ணயிக்கின்றன. ‘காய்கறிகளின் விலை உயர்வாக இருந்தாலும், எந்தவித விலை உயர்வையும் தற்போது மேற்கொள்ள வேண்டாம். அப்போதுதான் மக்கள் ஓட்டல்களுக்கு வருவார்கள்’ என ஓட்டல்கள் உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்.

மேலும், அனைத்து ஓட்டல் உரிமையாளர்களும் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும். பழைய வரியை வசூலித்தால் அது தவறு. ஒருவேளை வரி குறைப்புக்கு பிறகும் யாரேனும் பழைய வரி விகிதங்களின்படி பணம் வசூலித்தால் அதுதொடர்பாக தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் 044-28591500 என்ற எண்ணை தொடர்புகொண்டு வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x