

சேலம்: சேலம், கரூர் வழியாக இயக்கப்படும் தஞ்சாவூர்- ஹூப்பள்ளி (கர்நாடகா) இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்- ஹூப்பள்ளி இடையே சேலம் வழியாக, இரு மார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வழித் தடத்தில் பயணிகள் போக்குவரத்து அதிகமிருப்பதால், சிறப்பு ரயிலின் இயக்கம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஹூப்பள்ளி - தஞ்சாவூர் சிறப்பு ரயில் (எண். 07325), ஹூப்பள்ளியில் திங்கட்கிழமை தோறும் இரவு 8.25 மணிக்குப் புறப்பட்டு, செவ்வாய்க் கிழமை காலை 9.25 மணிக்கு சேலம், காலை 10.43 மணிக்கு கரூர், மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும். இந்த ரயிலின் இயக்கம் செப்டம்பர் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறு மார்க்கத்தில், தஞ்சாவூர் - ஹூப்பள்ளி சிறப்பு ரயில் (எண்.07326), செவ்வாய்க்கிழமை தோறும் தஞ்சாவூரில் இரவு 7.40 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10.25 மணிக்கு கரூர், இரவு 11.45 மணிக்கு சேலம், மறுநாள் மதியம் 12.30 மணிக்கு ஹூப்பள்ளி சென்றடையும். இந்த ரயிலின் இயக்கம் செப்டம்பர் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.