Published : 19 Jul 2023 04:00 AM
Last Updated : 19 Jul 2023 04:00 AM
சேலம்: சேலம் அருகே விநாயகா மிஷன் கல்லூரியில் பி.டி.எஸ் மூன்றாமாண்டு பயிலும் மாணவர் தற்கொலைக்கு காரணமான கல்லூரி முதல்வர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அம்மாப்பேட்டை சத்யா நகரைச் சேர்ந்தவர் குமரன். இவரது மகன் பரத் (22). சேலம் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 21-ம் தேதி அரியானூரில் உள்ள நண்பர் அறையில் பரத் விஷம் அறிந்து மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் பரத் உடல் பிரேதப் பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலை அரசு மருத்துவமனையில் திரண்ட பரத்தின் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பரத்தின் உறவினர்கள் கூறியதாவது: சேலம் விநாயகா மிஷன் கல்லூரியில் பரத் பிடிஎஸ் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கல்லூரி சார்பாக நடந்த கிரிக்கெட் போட்டியில் பரத்தை சார்ந்த அணிக்கும் எதிரணிக்கும் இடையே நடந்த போட்டியில் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த கல்லூரி நிர்வாகம், பரத் உள்பட 5 மாணவர்களை கல்லூரிக்கு வரக்கூடாது என வெளியே நிறுத்தியது.
இதனால் மனவேதனை அடைந்த பரத் கடந்த மாதம் 21-ம் தேதி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உயிரிழப்புக்கு காரணமான கல்லூரி முதல்வர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், உடலை வாங்க மாட்டோம், என்றனர். பரத்தின் உறவினர்களை சமாதானப்படுத்தி உடலை பெற்றுச் செல்வதற்கான நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT