Published : 03 Nov 2017 08:56 AM
Last Updated : 03 Nov 2017 08:56 AM

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வித்யாசாகர், பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும்: நீதிபதி ஆறுமுகசாமியிடம் திமுக மனு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக முன்னாள் ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவ், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்டோரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமியிடம் திமுக சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பி.சரவணன் நேற்று அவரிடம் ஒரு மனுவை அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது நடந்த திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கான படிவங்களில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கைரேகை இருந்தது. மருத்துவமனையில் ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்பது தெரியாத நிலையில், அந்த கைரேகை உண்மையானதுதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ரேகையை ஜெயலலிதாவிடம் இருந்து பெற்ற தாக டாக்டர் பாலாஜி சான்று அளித்துள்ளார். ஆனால், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை.

மருத்துவர்களிடம் விசாரணை

தவிர, மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அளித்த செய்திக்குறிப்புகளுக்கும், மரணத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. எனவே, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்கள், டெல்லி எய்ம்ஸ் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த சி.எச்.வித்யாசாகர் ராவ் மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்புகள் அனைத்தும் அன்றைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டது. ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அப்போது முதல்வர் பொறுப்புகளை கவனித்துவந்த ஓபிஎஸ், மருத்துவமனையில் அருகில் இருந்து கவனித்துவந்த சசிகலா, ஓபிஎஸ்ஸுக்குப் பிறகு முதல்வரான கே.பழனிசாமி ஆகியோருக்குதான் என்ன நடந்தது என்று தெரியும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே, முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா, அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்கள், உடலைப் பதப்படுத்தும் எம்பார்மிங் செய்த மருத்துவர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நிதிஷ் நாய்க், அஞ்சன் திரிகா, ஜி.சி.கிலானி, அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி, தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, டாக்டர் பாலாஜி, ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும். அனைத்து தகவல்களையும் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x