Published : 22 Nov 2017 09:18 AM
Last Updated : 22 Nov 2017 09:18 AM

ராமேசுவரம் மீனவர்கள் சுடப்பட்டபோது காட்டிய 22 மிமீ தோட்டாக்களை கடலோர காவல்படை பயன்படுத்துகிறது: மண்டபம் நிலைய கமாண்டர் தகவல்

ராமேசுவரம் மீனவர்கள் சுடப்பட்ட அன்று படகில் இருந்து அவர்கள் காட்டிய 22 மில்லி மீட்டர் ரக தோட்டாக்களை கடலோர காவல்படையினர் பயன்படுத்துகின்றனர் என்று கடலோர காவல்படை நிலைய அதிகாரி தெரிவித்தார்.

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நேற்று ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவப் பிரதிநிதி அருளானந்தம் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட ‘உப்புக் காற்றும் உசுரும்’ குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் எஸ். சமீரன் குறுந்தகட்டை வெளியிட தேசிய மீனவர் பேரவையின் தலைவர் எம்.இளங்கோ பெற்றுக்கொண்டார். மண்டபம் கடலோர காவல்படை நிலைய கமாண்டர் என்.வி. ராமாராவ், ராமேசுவரம் சரக காவல் கண்காணிப்பாளர் எம்.மகேஷ் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மண்டபம் கடலோர காவல்படை நிலைய கமாண்டர் ராமாராவ் பேசியது: இந்தியாவின் கடலோர பாதுகாப்பின் கண்களாக மீனவ சமுதாய மக்கள் உள்ளனர். இதனால் இந்திய கடலோர காவல்படையில் மீனவ மக்களும் சேர்ந்து பணியாற்றும் வகையில் அதற்கான நுழைவுத் தேர்வுகளுக்கு தமிழக மீன்வளத் துறையினரால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீனவ சமுதாய மக்களின் கருத்துகளை கேட்டறிவதற்காகவே இந்திய கடலோர காவல்படையினர் மாதாந்திர ஆய்வுக்கூட்டங்களை நடத்துகின்றனர். கடலோர காவல்படையில் தமிழ் உட்பட இந்தியாவின் அனைத்து மொழிகளை பேசுபவர்களும் பணியாற்றுகின்றனர். எனவே எங்களை தொடர்பு கொள்வதற்கு மொழி தடையாக இருக்காது என்றார்.

பின்னர், கடலோர காவல்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், ‘நான் மண்டபம் கடலோர காவல்படை நிலையத்தின் பொறுப்பாளர். எனவே இதுகுறித்து நான் கருத்து கூற முடியாது. துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட தோட்டா குறித்தும் நான் பதில் கூற முடியாது.

சம்பவம் நடந்த அன்று மீனவர்கள் காட்டிய 22 மில்லி மீட்டர் ரக தோட்டாக்களை கடலோர காவல்படை பயன்படுத்துகிறது என்றார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தது குறித்து கூறும்போது, ‘அவர் ரப்பர் தோட்டா பற்றி கருத்து கூறியிருக்கலாம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x