Published : 24 Nov 2017 10:25 AM
Last Updated : 24 Nov 2017 10:25 AM

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது குறித்து விளக்கம்: விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள் ஆஜர் - திமுக நிர்வாகி சரவணன் மேலும் ஆதாரங்கள் தாக்கல்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள், விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் 2-வது நாளாக நேற்று ஆஜராகி மேலும் சில ஆதாரங்களைக் கொடுத்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கலச மகால் கட்டிடத்தில் செயல்படும் அதன் அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை நேற்று முன்தினம் தொடங்கினார். பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தவர்களிடம் முதலில் விசாரணை நடத்தப்படுகிறது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன் நேற்று முன்தினம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். தன்னிடம் உள்ள சில ஆதாரங்களைக் கொடுத்தார். 2-வது நாளாக நேற்றும் அவர் ஆஜராகி, வேறு சில ஆதாரங்களைக் கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கையெழுத்திலும் மோசடி

ஜெயலலிதாவின் கைரேகைகள் தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே சமர்ப்பித்துள்ளேன். மருத்துவமனையில் இருந்தபோது அவரது கையொப்பம் இடப்பட்ட கடிதம் ஒன்று ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதிலும் ஜெயலலிதாவின் கையெழுத்து மோசடியாக போடப்பட்டுள்ளது. அது அவரது பழைய கையெழுத்துகளோடு பொருந்தவில்லை. வேறு யாரோ ஜெயலலிதாவின் கையெழுத்தை போட்டுள்ளனர். இதற்கான ஆதாரங்களைத் தற்போது கொடுத்துள்ளேன். கைரேகை, கையெழுத்து மோசடிகள் குறித்து தடயவியல் சோதனைக்கு உத்தரவிடுமாறு ஆணையத் தலைவரிடம் கோரிக்கை வைத்தேன். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

சிகிச்சையில் உள்ள சந்தேகங்களை நீதிபதி கேட்டறிந்தார். அதை தெளிவுபடுத்தினேன். சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்திகள் முரண்பாடாக உள்ளன. ஜெயலலிதா சுயநினைவில் இருந்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. எனவே, ஜெயலலிதாவின் கைரேகைகளை உறுதி செய்த அரசு மருத்துவர் பாலாஜி மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு மருத்துவர்கள் ஆஜர்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் அரசு மருத்துவர்களும் இடம்பெற்றிருந்தனர். அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, அரசு மருத்துவர்கள் நாராயணபாபு, மருந்துகள் துறை இயக்குநர் மயில்வாகனன், மருத்துவக் கல்வி முன்னாள் இயக்குநர் விமலா ஆகியோர் ஆணையம் முன்பு நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதற்கிடையில், மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி, விசாரணை ஆணையத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டிருந்த மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பு எப்போது விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கு பரிந்துரைத்தது, உத்தரவிட்டது யார்? அதன் பின்னணி என்ன? என்று விசாரிக்க வேண்டும். மருத்துவமனையில் இருந்தபோது, ஜெயலலிதாவின் அனைத்து துறைகள், பொறுப்புகளையும் அப்போதைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றி பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். மருத்துவமனையில் ஜெயலலிதாவை அவர் சந்தித்தது பற்றியும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்தன. ஜெயலலிதாவின் ஒப்புதலோடு ஆளுநர் செயல்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.

தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் மருத்துவமனையில் ஜெயலலிதாவைச் சந்தித்தார். இறுதிச் சடங்குகள் முடியும் வரை உடனிருந்தார். ஜெயலலிதா மரணம் சம்பந்தமாக அவருக்கும் பல உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

முதல்வரின் பொறுப்புகளைக் கவனித்துவந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு, உளவுத்துறை அறிக்கைகள் மூலம் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அனைத்து விவரங்களும் அவ்வப்போது தெரிந்திருக்கும். எனவே, அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x