Last Updated : 16 Nov, 2017 02:05 PM

 

Published : 16 Nov 2017 02:05 PM
Last Updated : 16 Nov 2017 02:05 PM

தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்கக் கோரி வழக்கு: விசாரணை டிச.8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

 

தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்கக் கோரிய வழக்கில் உரிய அதிகாரிகளை எதிர்மனுதாரராகச் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முனியசாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மழைக் காலங்களில் பெய்யும் மழை நீர், சேமிக்க போதிய வசதிகள் இல்லாததால், கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. விவசாயத்திற்கும் போதிய நீர் கிடைப்பதில்லை. இதனால் விவசாயம் பொய்த்து விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் கிடைக்கும் மழை நீர் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்யும் மழை நீரைச் சேமிக்க போதிய வசதிகள் இல்லை. இதனால் மழை நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. தண்ணீர் தேவைக்காக கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களைச் சார்ந்திருக்க வேண்டிய பரிதாப நிலை உள்ளது.

தமிழகத்திலிருந்து 300 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஆனால் இதில் 190 டிஎம்சி தண்ணீரைச் சேகரித்தாலே தமிழகத்தின் முழு தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து விட முடியும். மழைத் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதற்கு நதிகள் இணைக்கப்படாதது முக்கியக் காரணமாகும்.

தமிழகத்தில் காவிரி, பாலாறு, வைகை, தாமிரபரணி, வைப்பாறு, குண்டாறு நதிகளை இணைத்தால் 15 கோடி ஏக்கரில் விவசாயம் நடைபெறும் சூழல் உருவாகும். 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். வெள்ளச் சேதமும் தவிர்க்கப்படும்.

ஆந்திர மாநிலம் நதிகள் இணைப்பால் பலன் பெற்று வருகிறது. தமிழக நதிகளை இணைப்பது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பலமுறை பேசியுள்ளார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழகத்தில் ஓடும் அனைத்து நதிகளையும் இணைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜெ.அப்துல்குத்தூஸ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அமைச்சரவைச் செயலர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார். நதிகள் இணைப்பு தொடர்பாக அவர் நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே உரிய அதிகாரிகளை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x