

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பிரதிநிதியான மத்திய நீர்வள ஆணைய முதன்மைப் பொறியாளர் எல்.ஏ.வி.நாதன் தெரிவித்தார்.
முல்லை பெரியாறு அணையில் 136 அடி நீர் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்திக்கொள்ள கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அணையின் பராமரிப்பு மற்றும் அதைக் கண்காணித்து பாதுகாப்பது குறித்து தமிழக, கேரள, மத்திய அரசு பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து தமிழகம் சார்பில் தமிழ்நாடு பொதுப்பணித் துறை செயலர் சாய்குமார், கேரள அரசின் பிரதிநிதியாக அம்மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் செயலர் வி.ஜே.குரியன், மத்திய அரசின் பிரதிநிதியாக மத்திய நீர்வள ஆணைய முதன்மைப் பொறியாளர் எல்.ஏ.வி.நாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இக்குழுவினர் கடந்த 8-ம் தேதி திருவனந்தபுரத்தில் கூடி ஆலோசித்தனர். இதைத் தொடர்ந்து முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய இக்குழுவினர் வியாழக்கிழமை வந்தனர். மத்திய அரசின் பிரதிநிதி எல்.ஏ.வி.நாதன் தலைமையில் தமிழக, கேரள பிரதிநிதிகள் அணை பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மாலை 5.30 மணி அளவில் ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் எல்.ஏ.வி.நாதன் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 142 அடியாக அணையின் நீர் தேக்கும் அளவு உயர்த்தப்படும். தொடர்ந்து அணையைக் கண்காணிக்க தமிழக, கேரள மாநிலங்களில் இருந்து இரு பிரதிநிதிகள் அடங்கிய துணைக் குழு அமைக்கப்படும் என்றார். முன்னதாக அணையில் உள்ள 13 மதகுகளும் கீழே இறக்கப்பட்டன.
தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு
முன்னதாக 3 பேர் அடங்கிய குழு அணையை ஆய்வு மேற்கொண்டபோது அணைப் பகுதிக்கு தமிழக அதிகாரிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அதேசமயம் கேரள அதிகாரிகள் அணைப் பகுதிக்கு 2 படகுகளில் சென்றனர். அவர்களுடன் கேரள பத்திரிகையாளர்கள் தனியாக 2 படகுகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் இருந்து வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக் காட்சி கேமராமேன்களுக்கு ஒரு படகு மட்டுமே கொடுக்கப்பட்டு அதில் 19 பேர் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் தமிழக பத்திரிகையாளர்களுக்கும் கேரள அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விவசாயிகள் வரவேற்பு
முல்லை பெரியாறு அணை மீட்புக் குழு தலைவர் எஸ்.ஆர்.ரஞ்சித் கூறியபோது, அணையின் நீர் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணையின் பாதுகாப்பு கேரள காவல்துறை வசம் உள்ளது. இதை பழையபடி தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும். இல்லாவிட்டால் மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படையை அங்கு பாதுகாப்புப் பணியில் நிறுத்தவேண்டும்.
மேலும் அணை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், கேரள வனத்துறையினரை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் எந்த பிரச்சினையும் இல்லாமல் அடுத்தகட்ட பணிகள் தொடங்க வசதியாக இருக்கும் என்றார். இதற்கிடையில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் பட்டாசு, வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.