ரகு விபத்தின் சிசிடிவி வீடியோ காட்சியை விரைவில் வெளியிட உள்ளோம்: கோவை மாநகர போலீஸ்

ரகு விபத்தின் சிசிடிவி வீடியோ காட்சியை விரைவில் வெளியிட உள்ளோம்: கோவை மாநகர போலீஸ்
Updated on
1 min read

கோவையில் நேற்றுமுன் தினம் (சனிக்கிழமை) சாலை விபத்தில் ரகு என்ற இளைஞர் பலியான சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  விபத்தின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் சிசிடிவி வீடியோ காட்சியை விரைவில் வெளியிட உள்ளோம் என கோவை மாநகர போலீஸார் அறிவித்துள்ளனர்.

கோவையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு பல இடங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. அவிநாசி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி சந்திப்பு அருகே அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தபோது, அங்கு ஏற்பட்ட விபத்தில் மென்பொருள் பொறியாளர் ரகு (32) என்பவர் பலியானார்.

அமெரிக்காவில் பணியாற்றிய ரகு, திருமண ஏற்பாட்டுக்காக கோவை வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. அலங்கார வளைவில் மோதி விழுந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், இதனை கோவை மாநகர போலீஸார் மறுத்தனர். கோவை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியை மேற்கொண்டுள்ள தனியார் நிறுவன லாரி தவறான பாதையில் வந்து விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, அதன் ஓட்டுநரான பரமக்குடியைச் சேர்ந்த மோகன் (31) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், ரகு பலியான சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், கோவை விபத்தின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் சிசிடிவி வீடியோ காட்சியை விரைவில் வெளியிட உள்ளோம் என கோவை மாநகர போலீஸார் அறிவித்துள்ளனர்.

முன்னதாக, போலீஸார் கொடுத்த விளக்கத்தில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு அந்த லாரி தவறான பாதையில் வேகமாக வந்ததாகவும், அதில் மோதியதாலேயே இளைஞர் பலியானார் எனவும் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in