Last Updated : 06 Nov, 2017 11:55 AM

 

Published : 06 Nov 2017 11:55 AM
Last Updated : 06 Nov 2017 11:55 AM

தமிழகத்தில் முதல் முறையாக ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் சாலை பாதுகாப்பு பயிற்சி: மதுரை, திண்டுக்கல், தேனி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அமல்

வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உரிமம் பெற வருவோருக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்களை கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அளிக்கும் நடைமுறை தமிழகத்தில் முதல் முறையாக மதுரை போக்குவரத்து சரகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 134 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதில் 55 அலுவலகங்கள் பகுதி நேர வட்டார அலுவலகங்களாகும். இந்த அலுவலகங்களுக்கு ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம், உரிமங்கள் புதுப்பித்தல், புதிய வாகனங்கள் பதிவு போன்ற பல்வேறு பணிகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.

ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற வருவோருக்கு தினமும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சாலை பாதுகாப்பு தொடர்பாக பயிற்சி அளிப்பது வழக்கம். இப்பயிற்சி ஒரு மணி நேரம் நடைபெறும். பயிற்சிக்கு பிறகே ஓட்டுநர் பழகுநர் உரிமங்கள் வழங்கப்படும்.

இந்நிலையில் உரிமம் பெற வருவோருக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்களை கொண்டு பயிற்சி அளிப்பதற்கு பதில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியினரை வைத்து பயிற்சி அளிக்கும் நடைமுறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் அடங்கிய மதுரை போக்குவரத்து சரகத்தில் உள்ள 14 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கடந்த 3 வாரங்களாக ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை சேர்ந்தவர்கள் உரிமம் பெற வந்தவர்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பாக பயிற்சி அளித்து வருகின்றனர்.

ஒவ்வொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 15 முதல் 20 ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளியை சேர்ந்தவர்கள் சுழற்சி முறையில் விழிப்புணர்வு பயிற்சி அளித்து வருகின்றனர். இவர்கள் மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் இதுவரை 15 ஆயிரம் பேருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி அளித்துள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை மதுரை சரக இணை போக்குவரத்து ஆணையர் வி.பாலன் செய்துள்ளார்.

இது குறித்து மதுரை மைய வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் கூறியதாவது:

வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உரிமம் பெற வருவோருக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பயிற்சி வகுப்புகள் எடுத்து வந்தனர். தற்போது அப்பணியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்துவோர், சாலை பாதுகாப்பு விதிகளை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். மேலும் தங்களிடம் ஓட்டுநர் பயிற்சி பெறுவோர் என்னென்ன தவறுகள் செய்கின்றனர் என்பதை தெரிந்து வைத்திருப்பர்.

அந்த தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்கும் வகையில் பயிற்சி அளிக்க ஓட்டுநர் பயிற்சி பள்ளியினரால் முடியும்.

மேலும் இப்பயிற்சியின் மூலம் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்களும் கூடுதலாக சாலை விதிகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். இதனால் உரிமம் பெற வருவோர்கள் பலன் பெறுவர்.

வெறும் பயிற்சி மட்டும் இல்லாமல் சாலை பாதுகாப்பு விதிகள், சாலை விபத்துகள், விபத்துக்கான காரணங்கள் தொடர்பாக வீடியோ காட்சிகளை ஒளிபரப்பு செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இது தொடர்ந்து நடைபெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x