Published : 05 Jul 2014 12:00 AM
Last Updated : 05 Jul 2014 12:00 AM

48 வயதில் பட்டயக் கணக்காளராக தேர்வு: மகளுக்கு தந்தை முன்மாதிரி

தனது 48-வது வயதில் பட்டயக் கணக்காளராக தேர்வாகி, கல்லூரி செல்லவிருக்கும் தனது மகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார் இ.கண்ணன்.

திருவள்ளூரைச் சேர்ந்தவர் இ.கண்ணன். இவரது குடும்பத்தின் முதல் பட்டதாரியான இவர், 1986-ல் சென்னை விவேகானந்தா கல்லூரியில் வணிகவியல் பட்டம் முடித்து பட்டயக் கணக்காளருக்கான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், பாதியிலேயே இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தணிக்கை குழுவில் பணிக்கு சேர்ந்துவிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் படிக்கும்போது, பட்டயக் கணக்காளர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது மிகவும் அரிது. நான் திருவள்ளூரிலிருந்து காலை 4.40 மணி ரயிலை பிடித்து 6 மணி வகுப்புக்கு சென்னை வரு வேன். 1993-ல் எனக்கு வேலை கிடைத்தவுடன் இந்த படிப்பை தொடர முடியவில்லை. ஆனால், எப்படியாவது பட்டம் பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. எனவே, 2010-ம் ஆண்டு முதல் தீவிரமாக படித்து, கடந்த 2013-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றேன்” என்றார்.

கண்ணனையும் சேர்த்து 500 பேருக்கு வெள்ளிக்கிழமை சென்னை மியூசிக் அகாடமியில் பட்டயக் கணக்காளர் பட்டம் வழங்கப்பட்டு, இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

“படிப்பதற்கு வயது தடை யில்லை என்பதை தனது தந்தை நிரூபித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று கண்ணனின் மகள் அர்ச்சனா கூறினார். கண்ணனின் மனைவி காஞ்சனா வேடிக்கையாக கூறுகையில், “எனது மகள் பட்டம் பெறுவதற்குள் அவர் பட்டம் பெற்று விட வேண்டும் என்றுதான் அவரிடம் அடிக்கடி கூறுவேன். இன்று மிகவும் பெருமையாக உள்ளது” என்றார்.

பட்டமளிப்பு விழாவில் பேசிய இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் கே.ரகு கூறுகையில், “பட்டயக் கணக்காளர் படிப்பு தற்போது பிரபலமாகி வருகிறது. இதற்கு இந்தியாவில் மட்டுமல்ல, வெளி நாடுகளிலும் வேலை வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் உபதலைவர் மனோஜ் பட்னீஸ் கூறுகையில், “பட்டயக் கணக்காளர்களுக்கு சட்ட அறிவும், வரலாற்று அறிவும் மிகவும் முக்கியம். இந்திய நிறுவனங்கள் சட்டம் 2013 இயற்றப்படுவதற்கான மூலம் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ல் உள்ளது. எனவே, அன்றாட அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x