

சேலம்: சேலம் ஆட்சியர் அலுவலக தூய்மைப் பணியாளர் மீது தனியார் பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தது ஆர்டிஓ விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் உயிரிழந்தவரின் ‘திட்டமிட்ட செயல்’ இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி (42). இவர் ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் இரண்டாவது அக்ரஹாரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் வந்த தனியார் பேருந்து மீது மோதி உயிரிழந்தார். இது குறித்து டவுன் போலீஸார் விசாரணை நடத்தி, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சியில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பாப்பாத்தி திடீரென சாலையின் குறுக்கே சென்று தனியார் பேருந்து மீது மோதி கீழே விழுந்தது பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வைரலானது. பாப்பாத்தி மகனின் கல்வி கட்டணத்தை செலுத்த வழியின்றி, நிவாரண நிதி கிடைக்கும் என்பதால் தனியார் பேருந்து முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக செய்தி பரவியது.
இது தொடர்பாக ஆர்டிஓ அம்பாயிரநாதன் விசாரணை மேற்கொண்டதில், ‘பாப்பாத்தி மகன் கல்வி கட்டணம் செலுத்த வழியில்லாமல் பேருந்து முன் விழுந்து தற்கொலை செய்து கொள்ளவில்லை. போதுமான குடும்ப வருமானம் உள்ளது. கல்விக் கட்டணம் செலுத்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளிவந்த தகவல் முற்றிலும் தவறானது. இச்செய்தியை பார்த்து பலரும் உதவிட முன் வந்தும், பாப்பாத்தியின் குடும்பத்தினர் அப்பணத்தை ஏற்க மறுத்துவிட்டனர். சாலையை கடக்கும்போது எதிர்பாராத விதமாக பேருந்து வந்ததால், அவர் நிலை தடுமாறி பேருந்து மீது மோதியதால் விபத்து ஏற்பட்டு, காயம் அடைந்து இறந்துள்ளார்" என்பது தெரியவந்துள்ளது.
அதேபோல, சேலம் டவுன் காவல் நிலையத்திலும், பாப்பாத்தி மீது தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.