

விருதுநகர்: சென்னை மாகாணம் என்றிருந்த தமிழகத்துக்கு "தமிழ்நாடு" எனும் பெயர் சூட்டக் கோரியும், தமிழை ஆட்சி மொழியாக்கக் கோரியும் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரை போற்றும் வகையில், விருதுநகரில் உள்ள அவரது மண்டபத்தில் அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழுக்காக உயர் தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகரில் ரூ.1.6 கோடியில் தியாகி சங்கரலிங்கனாருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தைத் திறந்துவைத்தார்.
"தமிழ்நாடு" தினத்தையொட்டி விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மேலும், தியாகி சங்கரலிங்கனாரை போற்றும் வகையில் இன்று அவரது உருவச் சிலைக்கு வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, சுமார் ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற பேரணியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். கல்லூரி சாலை, அல்லம்பட்டி முக்குரோடு, அருப்புக்கோட்டை மேம்பாலம் வழியாக எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவரை பேரணி நடைபெற்றது.
பின்னர், தேசபந்து திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்துவைத்துப் பார்வையிட்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “விருதுநகருக்கு பெருமை சேர்த்தவர் தியாகி சங்கரலிங்கனார்.
தமிழ்நாடு எனும் பெயர் பெற்றுத்தர 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து மறைந்தார். அவரது புகழைப் போற்றும் விதமாக தமிழக முதல்வர், தமிழ்நாடு தினத்தை சிறப்பாகக் கொண்டாட உத்தரவு பிறப்பித்ததால் நாம் அனைவரும் தமிழ்நாடு தினத்தை பெருமையாகக் கொண்டிக்கொண்டிருக்கிறோம்” என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் விருதுநகர் நகராட்சித் தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்துகொண்டர்.
பின்புலம்: விருதுநகர் அருகேயுள்ள மண்மலைமேடு (சூலக்கரை மேடு) கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி - வள்ளியம்மை தம்பதிக்கு கடந்த 26.1.1895-ல் மகனாப் பிறந்தவர் தியாகி சங்கரலிங்கனார். சிறுவயதிருந்தே தமிழ்ப் பற்றும், நாட்டுப் பற்றும் மிக்கவராக இருந்தவர். இளைய வயதில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். ராஜாஜி தொடங்கிய காந்தி ஆசிரமத்தில் தங்கியிருந்து பணியாற்றினார். 1927ம் ஆண்டு மகாத்மா காந்தி விருதுநகர் வந்தபோது அவருக்கு உதவியாக பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, 1933ல் தீண்டா ஒழிப்புக்காக நடை பயணம் மேற்கொண்டபோதும் விருதுநகர் வந்த மகாத்மா காந்திக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்தவர் தியாகி சங்கரலிங்கனார். 1937ல் கரூரில் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார்.
தமிழ் மொழியின் மீது தீராத பற்றுகொண்ட சங்கரலிங்கனார், சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்ற வேண்டும், ஜனாதிபதி, கவர்னர் பதவிகளை ஒழிக்க வேண்டும், அரசு ஊழியர்கள் அனைவரும் கதர் ஆடை அணிய வேண்டும், தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும், நீதிமன்ற நிர்வாக மொழியாக தமிழ்மொழி கொண்டுவரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளுக்காக கடந்த 27.7.1957ல் தனது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி சங்கரலிங்கனார் பின்னர், விருதுநகர் தேசபந்து மைதானத்தில்தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மதுரையிலுள்ள அரசு மருத்துவமனையில் தியாகி சங்கரலிங்கனார் சேர்க்கப்பட்டார். ஆனால், தனது கொள்கைக்காக அப்போதும் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் கைவிடவில்லை. தமிழுக்காகவும் தமிழ்மேல் கொண்ட தனது கொள்கைக்காகவும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி 76வது நாளான 1956 அக்டோபர் 13ம் தேதி தியாகி சுந்தரலிங்கனார் உயிர் துறந்தார்.
அதைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி தமிழக சட்டசபையில் எதிர் கட்சிகள் முழக்கமிடத் தொடங்கின. சென்னை மாகாணம் என்பதை "தமிழ்நாடு" என அறிவித்து இதற்கான அறிவிப்பை 24.2.1961ல் தமிழக சட்டசபையில் அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார்.
பின்னர், 1967ல் அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகத்துக்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனாரை கவுரவிக்கும் விதத்தில் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என ஒருமித்த கருத்தை தெரிவித்தன. 1967ல் ஆட்சிப் பொறுப்பேற்ற அண்ணா, தமிழகத்துக்கு "தமிழ்நாடு" என்று பெயர்சூட்டத் தீர்மானித்து, அதன்படி 1967 ஜூலை 18-ம் தேதி இதுதொடர்பான தீர்மானத்தை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அனைத்துக் கட்சி ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.