60 ஆண்டுகளை கடந்த அமராவதி புது வாய்க்காலில் 22 இடங்களில் கரைகள் உடையும் அபாய நிலை

60 ஆண்டுகளை கடந்த அமராவதி புது வாய்க்காலில் 22 இடங்களில் கரைகள் உடையும் அபாய நிலை

Published on

உடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணை, முன்னாள் முதல்வர் காமராஜரால் ஏற்படுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து காவிரி ஆற்றை நோக்கி பாயும் பாம்பாற்றின் நீராதாரத்தையும், உப நதிகளான சின்னாறு, தேனாறு ஆகியவற்றையும் இணைத்து இந்த அணை ஏற்படுத்தப்பட்டது.

இதன் மூலமாக திருப்பூர், கரூர் மாவட்ட மக்கள் தங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். ஆண்டு முழுவதும் சுமார் 55,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு என இரு பாசனங்கள் நடைமுறையில் உள்ளன. அதில் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு அணையில் இருந்து புதுவாய்க்கால் மூலமாக தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

புதுவாய்க்கால், விநாடிக்கு 450 கன அடி நீர் கொள்ளளவு கொண்டது. இந்த வாய்க்கால் மூலமாக சுமார் 25,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலை பராமரிக்க பல ஆண்டுகளாகவே தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால், பல இடங்களில் கரைகள் பழுதடைந்துள்ளன.

குறிப்பிட்ட இடங்களில் ஓடைகள் குறுக்கிடுவதால், அங்கு பாலங்கள் கட்டப்பட்டு அதன் அடியில் வாய்க்கால் செல்கிறது. அதுபோன்ற இடங்களில் கான்கிரீட் பிடிப்புகள் சேதமாகியுள்ளதால், அவை உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. உடுமலையில் இருந்து கொழுமம் செல்லும் சாலையிலுள்ள சாமராயபட்டியில், ஓடையை கடந்து செல்லும் இடத்தில் சமீபத்தில் வாய்க்காலின் வலது கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

விநாடிக்கு 440 கன அடி வீதம் சென்று கொண்டிருந்த தண்ணீர், ஓடையை நோக்கி பாய்ந்தது. இதனால் ஓடையில் மண் அரிப்பு ஏற்பட்டதோடு, ஓடையை ஆக்கிரமித்தும், ஓடையை ஒட்டியும் சாகுபடி செய்திருந்த பயிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இது குறித்து தகவல் அறிந்ததும், அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்தில் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கருத்துரு அனுப்பியுள்ளனர்.

இது குறித்து பொதுப்பணித் துறையினர் கூறும்போது, "60 ஆண்டுகள் பழமையான வாய்க்கால் இது. முதல் 32 மைல் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலமாக, 22 இடங்களில் வாய்க்காலின் கரைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது தெரியவந்தது. கான்கிரீட் சுவர் எழுப்புவதன் மூலமாக, இது போன்ற பிரச்சினைகள் எழுவதை தடுக்க முடியும்.

இதற்காக ரூ.10 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு முதலே இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக 7-வது மைல் தொடங்கி, 16-வது மைல் வரை உள்ள வாய்க்கால் பகுதிகளை சீரமைக்க ரூ.4.9 கோடி ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப் பூர்வமான அரசாணை இன்னும் வெளியாகவில்லை. அது வெளியான பின்னர் தான் அடுத்த கட்ட பணிகள் நடைபெறும்" என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in